டார்வின்: ஆஸ்திரேலியாவின் டார்வினில் நடைபெற்ற 2-வது டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்கா 53 ரன்கள் வித்தியாசத்தில் பெரிய வெற்றியை பெற்றது. தென் ஆப்பிரிக்காவின் எழுச்சியுறும் நட்சத்திரம், சிஎஸ்கே அணிக்கு ஆடும் டேவால்ட் பிரேவிஸ் 8 சிக்சர்க்ள் 12 பவுண்டரிகளுடன் 56 பந்துகளில் 125 ரன்களை விளாசி வெற்றி நாயகனாகத் திகழ்ந்தார்.
இந்தப் போட்டியின் சில சாதனைத் துளிகள்: தென் ஆப்பிரிக்கா இந்தப் போட்டியில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 218 ரன்கள் எடுத்தது. இது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தென் ஆப்பிரிக்காவின் அதிகபட்ச டி20 ஸ்கோராகும். 2016 – ஜொஹான்னஸ்பர்கில் 204/7 ஸ்கோர்தான் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிகபட்சமாக இருந்தது.
டேவால்ட் பிரேவிஸின் 125 ரன்கள் என்பது தென் ஆப்பிரிக்க வீரர் ஒருவர் டி20 சர்வதேசப் போட்டியில் எடுக்கும் அதிகபட்ச ஸ்கோர் ஆகும். இதற்கு முன்னர் ஜொஹான்னஸ்பர்கில் 2015-ம் ஆண்டு ஃபாப் டு பிளெசிஸ் எடுத்த 119 ரன்களே சிறந்த தனிப்பட்ட டி20 சர்வதேச அதிக ஸ்கோராக இருந்தது.
அதேபோல் ஆஸ்திரேலிய மண்ணில், ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வாட்சன் எடுத்த 124 ரன்கள் ஸ்கோரைக் கடந்து ஆஸ்திரேலிய மண்ணில் எந்த ஒரு வீரரும் எடுத்த அதிகபட்ச ஸ்கோருக்கு டேவால்ட் பிரேவிஸ் சாதனை முன்னிலை வகிக்கின்றது. வாட்சன் இந்தியாவுக்கு எதிராக சிட்னியில் 2016-ம் ஆண்டு 124 ரன்களை விளாசியது குறிப்பிடத்தக்கது.
இந்தச் சதத்தை எடுக்கும் டேவால்ட் பிரேவிஸின் வயது 22 ஆண்டுகள் 105 நாட்கள். இந்த விதத்தில் டி20 சர்வதேச சதம் கண்ட முதல் தென் ஆப்பிரிக்க வீரர் ஆனார். 2012-ல் ரிச்சர்ட் லெவி நியூஸிலாந்துக்கு எதிராக சதம் எடுத்தபோது அவர் வயது 24 என்பது குறிப்பிடத்தக்கது.
பிரேவிஸ் 41 பந்துகளில் சதம் கண்டார். டி20 சர்வதேசப் போட்டிகளில் இது தென் ஆப்பிரிக்க வீரரின் 2-வது அதிவேக சதமாகும். 2017-ல் பங்களாதேஷ் அணிக்கு எதிராக டேவிட் மில்லர் சதம் கண்ட போது 35 பந்துகளே எடுத்துக் கொண்டார்.
ஆஸ்திரேலியாவில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டி20 சர்வதேச சதம் கண்ட முதல் வீரர் என்ற பெருமையையும் பிரேவிஸ் பெற்றார். அதேபோல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒரு வீரர் டி20-யில் எடுக்கும் அதிகபட்ச ஸ்கோருக்கான சாதனையில் இந்த சிஎஸ்கே வீரர் சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வைத்திருந்த சாதனையைக் கடந்து விட்டார். ருதுராஜ் 123 ரன்கள் எடுத்ததுதான் அதிகபட்சமாக இருந்தது. இந்த விதத்தில் பிரெண்டன் மெக்கல்லம் (116), மார்டின் கப்டில் 105, திலகரத்னே தில்ஷான் 104 ஆகியோர் சாதனைகளை உடைதெறிந்தார் பிரேவிஸ்.
3-வது விக்கெட் விழுந்த பிறகு தென் ஆப்பிரிக்கா சேர்த்த 161 ரன்கள் டி20 சர்வதேசப் போட்டியில் தென் ஆப்பிரிக்கா சேர்க்கும் அதிகபட்ச ஸ்கோர் ஆகும். அதேபோல் ஜாஷ் ஹாசில்வுட் 4 ஓவர்களில் 56 ரன்கள் விளாசப்பட்டார். இது டி20 சர்வதேசப் போட்டியில் அவருக்கு மிக அதிகமாகும்.