புதுடெல்லி: செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் வருடாந்திர உயர்மட்ட விவாதத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்ற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் 80-வது பொதுச் சபைக் கூட்டத் தொடர் செப்டம்பர் 9-ம் தேதி தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடரில் உயர்மட்ட பொது விவாதம் செப். 23 முதல் 29 வரை நடைபெற உள்ளது. இந்த தொடரின் முதல் பாரம்பரிய பேச்சாளராக பிரேசில் உள்ளது. பிரேசில் அரசு தலைவரின் உரையை அடுத்து, அமெரிக்க அதிபரின் உரை இருக்கும். ஐநா பொதுச் சபை மேடையில் உலக தலைவர்கள் மத்தியில் செப். 23-ம் தேதி அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் உரை நிகழ்த்த உள்ளார்.
இந்த உயர்மட்ட விவாதத்துக்கான தற்காலிக பேச்சாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, இந்திய அரசாங்கத் தலைவர் செப். 26-ம் தேதி ஐநா பொதுச் சபை மேடையில் உரையாற்றுவார். அதே தினத்தன்று, சீனா, இஸ்ரேல், பாகிஸ்தான், வங்கதேச அரசு தலைவர்களும் உரை நிகழ்த்த உள்ளனர்.
ஐநா பொதுச் சபையில் இந்தியா சார்பில் பிரதமர் நரேந்திர மோடி உரை நிகழ்த்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக அவர் அடுத்த மாதம் அமெரிக்கா செல்ல வாய்ப்பு உள்ளது. இதற்கு முன்பாக, கடந்த பிப்ரவரியில் பிரதமர் மோடி அமெரிக்கா சென்றார். அப்போது, அதிபர் ட்ரம்ப் உடன் நடத்திய பேச்சுவார்த்தையில், இரு நாடுகளுக்கு இடையே பல்வேறு ஒப்பந்தங்களை முன்னெடுத்துச் செல்வது தொடர்பான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
அமெரிக்கா – இந்தியா இடையேயான இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கான பேச்சுவார்த்தை இரு நாடுகளுக்கும் இடையே நடைபெற்று வருகிறது. எனினும், இந்தியா அதிக வரி விதிப்பதாகக் கூறி பதில் நடவடிக்கையாக 25% வரியை இந்திய பொருட்களுக்கு விதிப்பதாக ட்ரம்ப் அறிவித்தார். அதன்பின், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியைக் கண்டித்து கூடுதலாக 25% வரி குறித்த அறிப்பை வெளியிட்டார்.
அதேநேரத்தில், இந்தியா உடனான வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்க குழு வரும் 25-ம் தேதி இந்தியா வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.