புதுடெல்லி: டெல்லியில் உள்ள தெருநாய்கள் அனைத்தையும் 8 வாரங்களுக்குள் காப்பகங்களில் அடைக்க வேண்டுமென்ற சமீபத்திய உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து பரிசீலனை செய்வதாக தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் உறுதியளித்துள்ளார்.
நாடு முழுவதும் நாய்க்கடி மற்றும் ரேபிஸ் காரணமாக உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில், இது குறித்த செய்தி அறிக்கையை கவனத்தில் கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா மற்றும் நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த விவகாரத்தை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது.
இந்த வழக்கில் திங்கள் கிழமையன்று நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘டெல்லி, டெல்லி மாநகராட்சி, என்எம்டிசி ஆகியவை அனைத்து பகுதிகளில் இருந்தும் உடனடியாக தெரு நாய்களை கொண்டுவந்து காப்பகங்களில் அடைக்கவேண்டும். டெல்லியின் அனைத்து பகுதிகளிலும் உடனடியாக நாய் காப்பகங்களை கட்ட வேண்டும். இதில் ஒரு தெருநாய் கூட மீண்டும் விடுவிக்கப்படக் கூடாது. இது நடந்துள்ளது என்று எங்களுக்குத் தெரிந்தால், நாங்கள் கடுமையான நடவடிக்கை எடுப்போம். டெல்லி தெருக்களை முற்றிலும் தெரு நாய்கள் இல்லாததாக மாற்ற வேண்டும். தெரு நாய்களைத் தத்தெடுக்கவும் அனுமதிக்க கூடாது’ என உத்தரவிட்டனர்
இந்த தீர்ப்பினை குடியிருப்பாளர் நலச் சங்கங்கள் வரவேற்றன. ஆனால் விலங்கு ஆர்வலர்கள் இந்த தீர்ப்பை கடுமையாக எதிர்த்தனர்.
இந்த பிரச்சினை இன்று காலை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி முன்பு எழுப்பப்பட்டது. தெருநாய்களை இடமாற்றம் செய்வதையும் கொல்வதையும் தடைசெய்து, ஏற்கனவே உள்ள சட்டங்களைப் பின்பற்றுமாறு உத்தரவிட்ட முந்தைய நீதிமன்ற உத்தரவை கடைபிடிக்க வேண்டுமென அவரிடம் முறையிடப்பட்டது.
இதனையடுத்து, இந்த உத்தரவு குறித்து பரிசீலிப்பதாக தலைமை நீதிபதி பதிலளித்தார். இந்த உத்தரவு விலங்குகள் நல ஆர்வலர்களுக்கு நம்பிக்கையை அளித்துள்ளது.
உச்ச நீதிமன்ற நீதிபதி ஜே.கே.மகேஸ்வரி தலைமையிலான அமர்வு, 2024 மே மாதத்தில் பிறப்பித்த உத்தரவில், “அனைத்து உயிரினங்களுக்கும் கருணை காட்டுவது அரசியலமைப்பு மதிப்பு” என்று குறிப்பிடப்பட்டது. மேலும், தெருநாய்களை கையாளுவது குறித்த சில வழிகாட்டுதல்களையும் வழங்கியது.
தெருநாய்களை காப்பகங்களில் அடைக்கும் உத்தரவை மறுபரிசீலனை செய்யக் கோரி நடிகர் ஜான் ஆபிரகாம் தலைமை நீதிபதிக்கு அவசர மேல்முறையீடு செய்தார். அதேபோல முன்னாள் மத்திய அமைச்சரும், விலங்குகள் நல ஆர்வலருமான மேனகா காந்தி, “உச்ச நீதிமன்ற உத்தரவு நடைமுறைக்கு மாறானது. நிதி ரீதியாக சாத்தியமற்றது. இது சுற்றுச்சூழல் சமநிலைக்கு தீங்கு விளைவிக்கும்” என்று கூறினார்.