சென்னை: மழை வெள்ள பாதிப்பு பகுதிகளில் இருந்து கர்ப்பிணிகள், நோயாளிகளை மீட்டு சிகிச்சை அளிக்க படகு ஆம்புலன்ஸ் சேவை விரைவில் தொடங்கப்படவுள்ளது. தமிழக சுகாதாரத் துறையின் கீழ் செயல்படும் 108 ஆம்புலன்ஸ் சேவையை, இஎம்ஆர்ஐகீரின் ஹெல்த் சர்வீசஸ் நிறுவனம் செயல்படுத்தி வருகிறது.
தற்போது 900-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் வாகனங்கள் உள்ளன. ஆனால், மழை வெள்ள பாதிப்புகளின்போது, அந்த வாகனங்களை இயக்க முடியாத சூழல் உள்ளது. அதனால், 108 ஆம்புலன்ஸ் நிர்வாகம், 5 படகு ஆம்புலன்ஸ் வாங்க முடிவு செய்துள்ளது. இதற்கான திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக 108 ஆம்புலன்ஸ் சேவையின் மாநில செயல் தலைவர் செல்வகுமார் கூறியதாவது: வடகிழக்கு பருவமழை காலங்களில் ஏற்படும் வெள்ள பாதிப்புகளில், மீனவர்கள் உதவியுடன் படகு மூலமாக நோயாளிகள், கர்ப்பிணிகள் மீட்கப்பட்டு வருகின்றனர்.
சிலருக்கு அவசர மருத்துவ உதவி தேவைப்படும்பட்சத்தில், அந்நேரங்களில் மனிதர்கள் மூலமாக குறைந்தபட்ச முதலுதவி சிகிச்சை மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. இதனைத் தவிர்க்கும் வகையிலும், நோயாளிகள், கர்ப்பிணிகளை அவர்களின் இருப்பிடத்தில் இருந்தே, ஆக்சிஜன் உள்ளிட்ட வசதிகளுடன் மீட்கும் வகையிலான, படகு ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்படஉள்ளது.
அவசரகால மற்றும் முதலுதவி மருத்துவ உபகரணங்கள் உள்ளடக்கிய ஒரு படகு ஆம்புலன்ஸுக்கு ரூ.10 லட்சம் வரை செலவாகும். 5 படகுகளுக்கு, ரூ.50 லட்சம் செலவாகிறது. இவை மும்பையைச் சேர்ந்த படகு ஆம்புலன்ஸ் தயாரிக்கும் நிறுவனத்திடம் இருந்து கொள்முதல் செய்யப்படவுள்ளன.
இதற்காக, தமிழக அரசிடம் ஒப்புதல் கோரப்பட்டுள்ளது. அரசு ஒப்புதல் அளிக்கும்பட்சத்தில், இந்தாண்டு பருவமழை காலத்திலேயே படகு ஆம்புலன்ஸ் செயல்பட தொடங்கும். இந்த படகு ஆம்புலன்ஸில் ஓட்டுநர், மருத்துவ உதவியாளர் மற்றும் தீவிர சிகிச்சைக்கான அனைத்து வசதிகளும் இடம் பெற்றிருக்கும். வெள்ள பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் இந்த படகு ஆம்புலன்ஸ் பயன்படுத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.