வாஷிங்டன்: இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுடனும் அமெரிக்காவின் உறவு நன்றாக உள்ளது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் டாமி புரூஸ், “ இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுடனும் அமெரிக்கா இணைந்து பணியாற்றுவது பிராந்தியத்திற்கும், உலகிற்கும் ஒரு நல்ல செய்தி. இது நன்மை பயக்கக்கூடிய எதிர்காலத்தை உருவாக்கும்.
இரு நாடுகளுடனும் எங்கள் உறவு முன்பு போலவே உள்ளது, அது நல்லது என்று நான் கூறுவேன். அனைவரையும் அறிந்த, அனைவரிடமும் பேசும் ஒரு அதிபர் இருப்பதனால் ஏற்பட்ட நன்மை இதுதான். இதன் மூலமாக நாம் கருத்து வேறுபாடுகளை சரிசெய்ய முடியும். எனவே நமது ராஜதந்திரிகள் இரு நாடுகளிடமும் நல்ல உறவை பராமரிக்க உறுதிபூண்டுள்ளனர்” என்றார்
மேலும், “இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே மே மாதம் நடந்த மோதல், மிகவும் பயங்கரமான ஒன்றாக வளர்ந்திருக்கும். துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், அதிபர் ட்ரம்ப் மற்றும் வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ ஆகியோர் இந்த விவகாரத்தில் உடனடி அக்கறை காட்டி தாக்குதல்களை நிறுத்தினர். இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பேரழிவைத் தடுப்பதில் அமெரிக்காவின் உயர்மட்டத் தலைவர்கள் முக்கிய பங்கு வகித்தனர்” என்றார்
அமெரிக்காவின் மத்தியஸ்தம் இல்லாமல் இரு தரப்பு ராணுவங்களுக்கு இடையேயான நேரடிப் பேச்சுவார்த்தைகள் மூலமாகவே போர் நிறுத்தம் ஏற்பட்டதாக இந்தியா தொடர்ந்து சொல்லிவரும் நிலையில், அமெரிக்கா மீண்டும் தங்களே போர் நிறுத்தத்துக்கு காரணம் எனத் தெரிவித்துள்ளது.