பெங்களூரு: மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி அண்மையில், 2024 மக்களவைத் தேர்தலில் பெங்களூருவில் உள்ள மகாதேவப்புரா சட்டப்பேரவைத் தொகுதியில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் திருடப்பட்டதாக குற்றம் சாட்டினார்.
இதுகுறித்து கர்நாடக கூட்டுறவுத் துறை அமைச்சராக இருந்த கே.என்.ராஜண்ணா, ‘‘கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோதே வாக்காளர் பட்டியல் திருத்தப்பட்டது. அதனை ஏன் காங்கிரஸார் தடுக்கவில்லை?” என விமர்சித்தார். இந்த கருத்து காங்கிரஸ் மேலிடத்துக்கு கோபத்தை ஏற்படுத்தியதால் அவர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டார்.
இந்நிலையில் அவரது ஆதரவாளர்கள் நேற்று கர்நாடக மாநிலம் மதுகிரியில் காங்கிரஸ் மேலிடத்தை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுகிரி நகர கவுன்சிலர் கிரிஜா மஞ்சுநாத் தலைமையில் நடந்த போராட்டத்தில் 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அப்போது காங்கிரஸ் மேலிடத்துக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
இதுகுறித்து ராஜண்ணா கூறுகையில், ‘‘எனக்கு எதிராக சதி நடந்துள்ளது. டெல்லி சென்று மேலிடத் தலைவர்களை சந்தித்து எனது தரப்பு விளக்கத்தை தெரிவிப்பேன்’ என்றார்