புதுடெல்லி: உத்தரபிரதேச மாநிலம் பதேபூரை அடுத்த பரூக்காபாத்திலும் தர்காவா? கோயிலா? என்ற சர்ச்சை கிளம்பியுள்ளது. இரு தரப்பினர் நடத்திய போராட்டம் தொடர்பாக 145 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. உ.பி.யின் பரூக்காபாத்தில் கைம்கஞ்ச் பகுதியில் ஷிவ்ராய் மத் எனும் கிராமம் உள்ளது. இங்கு கான் பகதூர் பாபா சைய்யத் என்பவரின் சமாதியுடன் ஒரு தர்கா உள்ளது. இங்கு வெள்ளிக்கிழமைகளில் முஸ்லிம்களுடன் இந்துக்களும் வந்து பாபா சைய்யத்தின் சமாதியை வழிபடுவது வழக்கம்.
இங்கு வருடந்தோறும் நடைபெறும் சந்தனக்கூடு விழாவிலும் இந்துக்கள் கலந்துகொண்டு மதநல்லிணக்கம் பேணி வந்தனர்.இந்நிலையில் இந்த தர்கா அங்கிருந்த ஒரு சிவன் கோயிலை இடித்துவிட்டு, கட்டப்பட்டதாக சமீபத்தில் ஒரு புகார் கிளம்பியது. இதையடுத்து கடந்த 1-ம் தேதி கடக்சிங் என்ற கிராமவாசி தர்காவினுள் நுழைந்து அங்கிருக்கும் சமாதியை சேதப்படுத்தினார்.
இது தொடர்பான புகாரின் பேரில் கடக்சிங் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டாலும் அவர் இன்னும் கைது செய்யப்படவில்லை. எனினும் தர்கா முன் சிசிடிவி கேமராக்களை போலீஸார் பொருத்தினர். இந்நிலையில் கடந்த 7-ம் தேதி தர்கா முன் கூடிய இந்துத்துவா அமைப்பினர் சர்சைக்குரிய கோஷங்களை எழுப்பி ஆர்பாட்டம் செய்தனர். அவர்கள் தர்கா முன் இருக்கும் சிசிடிவி கேமராக்களை அகற்றவும் வலியுறுத்தினர்.
இவர்களுக்கு பதிலளிக்கும் வகையில் முஸ்லிம்களும் அங்கு திரண்டு கோஷம் எழுப்பினர். இதனால் இருதரப்பிலும் மோதல் ஏற்படும் சூழல் உருவானது. பிறகு போலீஸார் தலையிட்டு அனைவரையும் விரட்டினர். தர்கா முன் அனுமதியின்றி கூடியது மற்றும் மதநல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவித்ததாக இருதரப்பிலும் 45 பேரின் பெயரை குறிப்பிட்டும் 100 பேர் அடையாளம் தெரியாதவர்கள் எனவும் கைம்கஞ்ச் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.
இதற்கிடையில் பதேபூர் தர்காவில் நேற்று முன்தினம் புகுந்து அமளி செய்த பாஜக, பஜ்ரங்தளம் உள்ளிட்ட இந்துத்துவாவினர் மீதும் வழக்குகள் பதிவாகி உள்ளன. இவர்கள் தர்காவினுள் நட்ட காவிக் கொடிகளை அகற்றிய போலீஸார் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.
தர்காவினுள் அத்துமீறிப் புகுந்து காவிக் கொடி, நட்டு பூஜைகள் செய்ததாக சுமார் 15 பேர் மீது வழக்குகள் பதிவாகி உள்ளன. இதில், தர்காவினுள் புகுந்ததாக வெளிப்படையாக ஊடகங்களில் ஒப்புக்கொண்ட பதேபூர் மாவட்ட பாஜக தலைவர் முக்லால் பால் மற்றும் இந்து மகா சபா துணைத் தலைவர் மனோஜ் திரிவேதி ஆகியோரின் பெயர்கள் இடம்பெறவில்லை.