சென்னை: சென்னையில், இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தின்கீழ் 3 வழித்தடங்களில் ரூ.63,246 கோடியில், 116.1 கி.மீ. தொலைவுக்கு பணிகள் வேகமாக நடைபெறுகின்றன. தொடர்ந்து, பூந்தமல்லி – பரந்தூர், கோயம்பேடு – ஆவடி என அடுத்தடுத்து, மெட்ரோ ரயில் திட்டங்களைச் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே, சென்னையின் பிரதான பகுதியாக இருக்கும் தாம்பரம் – கிண்டி – வேளச்சேரி மற்றும்
கலங்கரை விளக்கம் – உயர் நீதிமன்றம் வரை மெட்ரோ ரயில் திட்டம் நீட்டிப்பு குறித்து தயாரிக்கப்பட்ட சாத்தியக்கூறு அறிக்கைக்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்ததால், அடுத்தகட்டமாக விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்க சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
அதன்படி, தாம்பரம் – கிண்டி – வேளச்சேரி மெட்ரோ ரயில் தடத்தில் மேடவாக்கம், பள்ளிக்கரணை, வேளச்சேரி ஆகிய புறநகர் பகுதிகள் கிண்டி மெட்ரோவுடன் 21 கி.மீ. தூரத்தில் இணைக்கப்பட உள்ளன. இதேபோல, கலங்கரை விளக்கத்தில் இருந்து மெரினா கடற்கரை, தலைமைச் செயலகம் வழியாக உயர் நீதிமன்றம் வரை 7 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ திட்டம் இணைக்கப்பட உள்ளது.
ஒப்பந்த ஆணை வழங்கல்: இந்நிலையில், இந்த மெட்ரோ திட்டத்துக்கு விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்க, சிஸ்ட்ரா எம்விஏ கன்சல்டிங் இந்தியா என்ற நிறுவனத்துக்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஒப்பந்தம் வழங்கியுள்ளது. கலங்கரை விளக்கம் – உயர் நீதிமன்றம் தடத்தில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ரூ.38.20 லட்சம், தாம்பரம் முதல் வேளச்சேரி வரையிலான மெட்ரோவுக்கு திட்ட அறிக்கை தயாரிக்க ரூ.96.19 லட்சத்துக்கான ஒப்பந்த ஆணை வழங்கப்பட்டுள்ளது.
இந்த விரிவான திட்ட அறிக்கைகள் 120 நாட்களில் சமர்ப்பிக்கப்பட வேண்டும். சென்னை மெட்ரோ ரயில் நிர்வாக இயக்குநர் சித்திக் முன்னிலையில், திட்ட இயக்குநர் அர்ச்சுனன் மற்றும் சிஸ்ட்ரா எம்விஏ கன்சல்டிங் நிறுவன துணைத் தலைவர் பர்வீன்குமார் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இதுகுறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறும்போது, “இந்த ஒப்பந்தத்தின்படி, வழித்தடப் பாதை அமையும் இடங்கள், பயணிகள் எண்ணிக்கை, பல்வேறு போக்குவரத்து முறைகளுடன் ஒருங்கிணைப்பு மற்றும் தொழில்நுட்ப சாத்தியக்கூறுகள் விரிவாக மதிப்பீடு செய்யப்படும்.
வழித்தடங்கள், போக்குவரத்து நெரிசல், செலவுகள், மொத்த திட்ட மதிப்பீடு உள்ளிட்டவை குறித்த முழு விவரங்கள் இடம்பெறும். இதையடுத்து மத்திய, மாநில அரசின் ஒப்புதல் பெற்று மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படும்” என்று அவர்கள் கூறினர்.