புதுடெல்லி / மும்பை: இந்திய குடியுரிமைக்கான ஆதாரமாக ஆதார அட்டையை ஏற்றுக்கொள்ள முடியாது என்று உச்ச நீதிமன்றமும், மும்பை உயர் நீதிமன்றமும் கூறியிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
பிஹாரில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் 11 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கு நீதிபதிகள் சூரிய காந்த், ஜாய்மாலாபாக்சி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் கூறும்போது. “ஐந்து கோடி வாக்காளர்கள், தாங்கள் இந்தியக் குடிமகன்கள் என்பதை இரண்டரை மாதங்களில் நிரூபிக்க வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. இந்நிலையில், ஆதாரை ஆவணமாக ஏற்க மறுப்பது அநீதியாகும்” என்று வாதிடப்பட்டது.
அதற்கு, தேர்தல் ஆணையம் சார்பில் கூறும்போது, “மனுதாரர்கள் தரப்பில் அர்த்தமற்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன. வரைவு வாக்காளர் பட்டியலில் தவறுகள் இருந்தால் நேரடியாக தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பிக்கலாம். தற்போதைய நிலையில் ஆதார், வாக்காளர் அட்டை, ரேஷன் அட்டையை குடியுரிமை சான்றுக்கான ஆவணமாக ஏற்க முடியாது. இந்த ஆவணங்களில் போலிகள் அதிகம் உள்ளன” என்று தெரிவிக்கப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமன்றம், “ஆதார் அட்டை குடியுரிமை சான்று கிடையாது என்ற தேர்தல் ஆணையத்தின் வாதத்தை நாங்கள் ஏற்கிறோம்” என்று தெரிவித்துள்ளது.
இதனிடையே, “ஆதார் அட்டை, பான் அட்டை, வாக்காளர் அட்டையை வைத்திருப்பதால் ஒருவர் இந்திய குடிமகனாக முடியாது. இந்த ஆவணங்கள் அடையாள ஆவணங்கள் மட்டுமே” என்று மும்பை உயர் நீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்திருப்பதையும், அது தொடர்பான வழக்கும் கவனம் பெற்றுள்ளது.
வங்கதேசத்தை சேர்ந்தவர் பாபு அப்துல் ரூப் சர்தார். இவர் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்தவர் என்பது குற்றச்சாட்டு. கடந்த 2013-ம் ஆண்டு முதல் மகாராஷ்டிராவின் தானே நகரில் இவர் வசித்து வந்தார். அங்கு பாபு கன்ஸ்ட்ரக்ஷன் என்ற பெயரில் கட்டுமான நிறுவனத்தையும் நடத்தி வந்தார். இந்தச் சூழலில் சட்டவிரோத குடியேற்ற சட்டத்தின் கீழ் கடந்த 2024-ம் ஆண்டில் மகாராஷ்டிர போலீஸார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கில் ஜாமீன் கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் பாபு அப்துல் ரூப் சர்தார் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, பான் அட்டை, பாஸ்போர்ட், வருமான வரி கணக்கு தாக்கல் செய்தற்கான ஆவணங்கள், வங்கி கணக்குகள், சமையல் காஸ் இணைப்பு, மின் கட்டண ரசீதுகள், தொழில் உரிம சான்று ஆகியவற்றை அவர் இணைத்திருந்தார். வழக்கு விசாரணையின்போது, தன்னை இந்திய குடிமகன் என்று பாபு அப்துல் ரூப் சர்தார் வாதிட்டார். இதை போலீஸ் தரப்பு திட்டவட்டமாக மறுத்தது.
போலீஸ் தரப்பில் நீதிமன்றத்தில் கூறும்போது, “வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக அவர் இந்தியாவுக்குள் ஊடுருவி உள்ளார். வங்கதேச அரசு சார்பில் அவருக்கு பிறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. அதோடு அவர் வங்கதேசத்தில் உள்ள தனது உறவினர்களுடன் நாள்தோறும் செல்போனில் பேசி வந்துள்ளார். அவர்களுக்கு பணம் அனுப்பி உள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டது. இதற்கான ஆதாரங்களும் போலீஸ் தரப்பில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி அமிர் போர்கர், இந்த வழக்கை விசாரித்து முக்கிய உத்தரவைப் பிறப்பித்தார். அதில், “குடியுரிமை சட்டம் 1955-ல் இந்திய குடியுரிமைக்கான அனைத்து விதிகளும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. அந்த விதிகளை பூர்த்தி செய்யும் நபரே இந்திய குடிமகன் ஆவார்.
ஆதார் அட்டை, பான் அட்டை, வாக்காளர் அட்டையை வைத்திருக்கும் ஒருவர் இந்திய குடிமகனாக முடியாது. இந்த ஆவணங்கள், அடையாள ஆவணங்கள் மட்டுமே. இவை இந்திய குடியுரிமையை உறுதிப்படுத்தாது. யார் உண்மையான குடிமகன், யார் சட்டவிரோத குடியேறி என்பதை சட்டவிதிகளே உறுதி செய்கின்றன.
மனுதாரர் பாபு அப்துல் ரூப் சர்தார் ஜாமீன் கோரியுள்ளார். அவர் வங்கதேசத்தை சேர்ந்தவர் என்பதை போலீஸார் ஆதாரத்துடன் நிரூபித்துள்ளனர். மனுதாரர் தாக்கல் செய்திருக்கும் ஆவணங்கள் உண்மையா, போலியா என்பது குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும்.
இதன்படி இந்திய தனித்துவ ஆணையம், பாஸ்போர்ட் அலுவலகம், மத்திய வெளியுறவுத் துறை உள்ளிட்ட அரசு துறைகளை அதிகாரிகள் தனித்தனியாக விசாரணை நடத்த வேண்டும். இதற்கு கால அவகாசம் தேவைப்படும். மனுதாரரை ஜாமீனில் விடுதலை செய்தால் அவர் தப்பிச் செல்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. இது நாட்டின் பாதுகாப்பு சார்ந்த விவகாரம். எனவே ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
மனுதாரரின் குடியுரிமை விவகாரம் தொடர்பாக ஓராண்டு காலத்துக்குள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இறுதி முடிவு எடுக்கவில்லை என்றால், அவர் ஜாமீன் கோரி மீண்டும் மனு தாக்கல் செய்யலாம்” என்று அந்த உத்தரவில் மும்பை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.