திருச்சி: சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களின் பிரச்சினை ஓரிரு நாட்களில் முடிவுக்கு வரும் என்று நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.
திருச்சி உறையூரில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: சென்னையில் போராட்டம் நடத்திவரும் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களை, துறை அமைச்சராகிய நான் சந்தித்துப் பேசவில்லை என்பது தவறு.
நாங்கள் 4 நாட்கள் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளோம். பிரச்சினையை சுமுகமாக தீர்ப்பதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறோம். பணி நிரந்தரம் குறித்து முதல்வர்தான் முடிவு செய்ய வேண்டும்.
ஏற்கெனவே 17,000 பேரை நாங்கள் பணி நிரந்தரம் செய்து இருக்கிறோம் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஒருவர் கூறியுள்ளார். ஆனால், துப்புரவுப் பணிக்காக நியமிக்கப்பட்ட அவர்களை துப்புரவு பணிக்காக பயன்படுத்தவில்லை. நாடு முழுவதும் துப்புரவுப் பணியில் பிரச்சினை உள்ளது. அவர்கள் சொல்வதுபோல, பணி நிரந்தரம் ஒரே நாளில் செய்கிற காரியம் அல்ல. ஓரிரு நாட்களில் தூய்மைப் பணியாளர்கள் பிரச்சினை முடிவுக்கு வரும்.
குப்பை குவிந்துவிடக் கூடாது என்பதற்காக பல்வேறு பகுதிகளில் உள்ள தூய்மைப் பணியாளர்களை வைத்து குப்பை சேகரமாகும் இடங்களில் உள்ள குப்பையை அகற்றிவருகிறோம். புதிதாக யாரையும் இப்பணியில் நியமிக்கவில்லை. தெரு நாய்கள் தொடர்பாக உச்ச நீதிமன்றம் அருமையான உத்தரவை பிறப்பித்துள்ளது.
அந்த உத்தரவு வந்தவுடன், மாநகராட்சிகள் சார்பில் அத்திட்டம் செயல்படுத்தப்படும். நிதிநிலையை பொறுத்து தேர்தல் வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக செயல்படுத்தி வருகிறோம். ஒரே நாளில் அனைத்தையும் செயல்படுத்த முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.