சென்னை: தமிழகத்தில் முதல் முறையாக மாநில அளவில் டாஸ்மாக் கடை பணியாளர்கள் கலந்தாய்வு மூலம் பணி நிரவல் செய்யப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் தற்போது 4,826 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. இந்த கடைகளில் விற்பனையாளர், உதவி விற்பனையாளர், விற்பனை மேற்பார்வையாளர் என 24 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் டாஸ்மாக் கடை பணியாளர்களை கடைகளின் நிலை மற்றும் தேவைக்கு ஏற்ப பணியிட மாற்றம் செய்ய டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்காக மாநில அளவில் கலந்தாய்வு மூலம் பணி நிரவல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் மாவட்ட அளவில் பணி நிரவல் செய்யப்பட்ட நிலையில் முதல் முறையாக மாநில அளவில் இந்த பணி மேற்கொள்ளப்படவுள்ளது.
இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரிகள் கூறியதாவது: டாஸ்மாக் கடைகளில் தினமும் நடக்கும் விற்பனையின் அளவை கொண்டுகடை பணியாளர்களின் எண்ணிக்கை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ரூ.2 லட்சம் வரை விற்பனை நடைபெறும் கடைகளில் ஒரு மேற்பார்வையாளர், 3 விற்பனையாளர்களும், ரூ.2-4 லட்சம் விற்பனையாகும் கடைகளில் ஒரு மேற்பார்வையாளர், 4 விற் பனையாளர்களும், ரூ.4-6 லட்சத்துக்கு 2 மேற்பார்வையாளர், 4 விற்பனையாளர்களும், ரூ.6-8 லட்சத்துக்கு 2 மேற்பார்வையாளர், 5 விற்பனையாளர்களும், ரூ.8-10 லட்சத்துக்கு 2 மேற்பார்வையாளர், 6 விற்பனையாளர்களும் கடைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
இதில் ஒரு சில இடங்களில் குறைவான விற்பனை நடைபெறும் கடைகளில் கூடுதலாகவும், அதிகமான விற்பனையாகும் கடைகளில் குறைவான பணியாளர்களும் உள்ளனர். இதனை சரி செய்ய கலந்தாய்வு மூலம் பணி நிரவல் மேற்கொள்ளப்படவுள்ளது. இதில் ஒரே இடத்தில்
10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றியுள்ளவர்களை விற்பனை அதிகம் நடக்கும் இடங்களில் நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் ஒரு சில இடங்களில் அதிக விற்பனை நடந்தாலும் அரசியல் பின்புலம் காரணமாக குறைவான பணியாளர்களை வைத்தே விற்பனை செய்கின்றனர். இதனை தடுக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்க பொதுச்செயலாளர் தனசேகர் கூறியதாவது: இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது, இதனால் பணியாளர்களின் பனிசுமை குறையும். ஆனால் இதில் எந்தவித குளறுபடிகள் இல்லாமல் செய்ய வேண்டும். அரசியல் பலம், நிர்வாகத்தில் உயரதிகாரிகளுன் உதவியோடு சிலர் இந்த நடவடிக்கையிலும் தலையிட வாய்ப்புள்ளது. அதுபோல ஏதும் நடக்காமல் நிர்வாக இயக்குநர் சரியாக இந்த பணி நிரவல் கலந்தய்வை நடத்தி முடிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.