சென்னை: முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேசன் பொருட்களை விநியோகிக்கும் ‘தாயுமானவர்’ திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் நேற்று தொடங்கிவைத்தார்.
அரசு வழங்கும் பல்வேறு சேவைகளை பொதுமக்களின் வீடுதேடிச் சென்று வழங்கும் தமிழக அரசின் உயரிய நோக்கத்தின் அடுத்த கட்டமாக, மாநிலத்தில் உள்ள முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேசன் பொருட்களை விநியோகம் செய்யும் ‘முதல்வரின் தாயுமானவர் திட்டம்’ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மக்கள் நலன் சார்ந்த இந்த திட்டம் சிறப்பு கவனம் தேவைப்படும் பிரிவினரின் வாழ்வை மேம்படுத்துவதுடன், உணவுப் பாதுகாப்பையும் உறுதி செய்யும். இந்த திட்டத்தின் வாயிலாக 34,809 ரேசன் கடைகளைச் சேர்ந்த 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களைக் கொண்ட 15,81,364 குடும்ப அட்டைகளில் உள்ள 20,42,657 பயனாளிகள், 91,969 குடும்ப அட்டைகளில் உள்ள 1,27,797 மாற்றுத் தினாளிகள் என மொத்தம் 16,73,333 குடும்ப அட்டைகளில் உள்ள 21,70,454 பயனாளிகள் பலனடைவர். அவர்களது வீடுகளுக்கே சென்று அத்தியாவசியப் பொருட்கள் விநியோகிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மாதந்தோறும் இரண்டாவது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். திட்டத்தில் பயன்பெறத் தகுதியுள்ள குடும்ப அட்டைதாரர்களின் விவரம் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையிடமிருந்து பெறப்பட்டு, கள அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் மூலம், மின்னணு எடைத்தராசு, மின்னணு விற்பனைமுனைய இயந்திரம் உள்ளிட்ட உபகரணங்களுடன், மூடிய வாகனங்களில் குடிமைப் பொருட்களைப் பாதுகாப்பாக பயனாளர்களின் வீட்டுக்கே கொண்டுசென்று, ரேஷன் கடை ஊழியர்கள் விநியோகிப்பர். இத்திட்டத்தால் அரசுக்கு கூடுதலாக ரூ.35.92 கோடி செலவாகும்.
மக்கள் நலன் சார்ந்த இத்திட்டம், நலிவுற்ற பிரிவினரின் வாழ்வாதாரத்தை சிறப்புறச் செய்வதுடன், அவர்களது உணவுப் பாதுகாப்பையும் உறுதிசெய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை தண்டையார்பேட்டை, கோபால் நகர் மற்றும் அன்னை சத்யா நகரில், மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியோரின் வீடுகளுக்கே முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று நேரில் சென்று, ரேசன் பொருட்களை வழங்கி, இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பயனாளிகளுடன் உரையாடினார்.
இந்நிகழ்ச்சியில், அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தலைமைச் செயலர் நா.முருகானந்தம், துறைச் செயலர் சத்யபிரத சாஹு, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் க.நந்தகுமார், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாக இயக்குநர் அ. ஜான்லூயிஸ், உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை இயக்குநர் எஸ்.சிவராசு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதேபோல, சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும், மற்ற மாவட்டங்களில் அமைச்சர்கள், எம்எல்ஏ-க்கள் ஆகியோரும் திட்டத்தை தொடங்கி வைத்தனர்.
கனிவாக நடந்து கொள்ளுங்கள்: தாயுமானவர் திட்டம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள காணொலியில் பேசியிருப்பதாவது:
திராவிட மாடல் ஆட்சியில் ஒவ்வொரு திட்டத்தையும் பார்த்துப் பார்த்து செயல்படுத்துகிறோம். அந்த வரிசையில், என் மனதுக்குப் பிடித்த திட்டமாக உருவாகியிருப்பதுதான் இந்த தாயுமானவர் திட்டம். அரசின் சேவைகளை பொதுமக்களின் வீடுகளுக்கே தேடிச் சென்று கொடுப்பது இந்தியாவுக்கே முன்மாதிரி முயற்சியாகும்.
கூட்டுறவுத் துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். இத்திட்டத்தின் நோக்கம் 100 சதவீதம் நிறைவேறும் வகையில் நீங்கள் பணியாற்ற வேண்டும். உங்களை எதிர்பார்த்துக் காத்திருக்கும் முதியோரும், மாற்றுத் திறனாளிகளும் மனம் குளிரும் வகையில் நீங்கள் கனிவாக நடந்துகொள்ள வேண்டும். இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.
முதல்வரின் அக்கறை: பயனாளிகள் நெகிழ்ச்சி முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னையில் தாயுமானவர் திட்டத்தை தொடங்கி வைத்து, பயனாளிகளின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று அவர்களுடன் உரையாடினார்.
அப்போது பயனாளிகள் கூறியதாவது: மாதந்தோறும் ரேசன் கடைகளுக்கு நேரடியாக செல்லும்போது பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டோம். வீட்டிலிருந்து கடைகள் தூரமாக இருப்பதால், எங்களால் செல்ல இயலவில்லை. ரேசன் கடைகளில் வாங்கும் பொருட்களை எடுத்து வருவதும் மிகவும் சிரமமாக இருந்தது. தற்போது வீடுகளுக்கே நேரடியாக பொருட்களை கொண்டு வந்து தருவது, வரப்பிரசாதமாக இருக்கிறது. மேலும், பொருட்களை எங்களது கண் முன்பே எடை போட்டு தருவதும் திருப்தியாக இருக்கிறது.
இவ்வாறு முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் மீது முதல்வர் மிகுந்த அக்கறையுடன், வீடு தேடி மருத்துவம், தாயுமானவர் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதும் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வாறு நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.