வேலையும், சம்பளமும் இல்லாமல் படு சோக்காக சுற்றும் இளைஞர்களை நம்மூரில், ‘என்னப்பா, மன்னார் அண்ட் கம்பெனியில் வேலையா?” என்று கிண்டல் செய்யும் வழக்கமுண்டு. நடிகர் கே.ஏ.தங்கவேலு ‘கல்யாணப் பரிசு’ படத்தில், தனக்கு வேலையில்லை என்றாலும் தான் மன்னார் அண்ட் கம்பெனியின் மேனேஜர் என்று மனைவியிடம் பொய் சொல்லி பந்தா காட்டித் திரிவார். அதிலிருந்துதான், மன்னார் அண்ட் கம்பெனி பகடி பிரபலமானது. அது இன்றும் தொடர்கிறது.
நாம் திரையில் பார்த்த ஒரு காமெடி சீன் நிஜத்தில் இந்த 2025-ல் எங்கோ நடந்து கொண்டிருக்கிறது என்றால் நம்பத் தோன்றுகிறதா?. நம்புங்கள், நிஜமாகவே சீனாவில் இயங்கிக் கொண்டிருக்கின்றன இத்தகைய போலி அலுவலகங்கள். ஆம், நவீன கால மன்னார் அண்ட் கம்பெனிகள்!
சீனாவில் வேலைவாய்ப்பின்மை விகிதம் பல ஆண்டுகளாக விடாப்பிடியாக 14 சதவீதமாக இருந்து வருகிறது. இதனால் வேலையில்லா சீன இளைஞர்கள் வீட்டிலேயே முடங்கிக் கிடப்பதற்குப் பதிலாக போலியாக வேலைக்குச் செல்கின்றனர். இத்தகைய போலி அலுவலகங்களுக்கு இந்த இளைஞர்கள் கட்டணமும் செலுத்துகின்றனர். 8 மணி நேர வேலைக்கு நிறுவனம் ஊதியம் கொடுப்பதுபோல், 8 மணி நேரம் ஒரு நிறுவனத்தில் இருக்க இவர்கள் அந்த நிறுவனத்துக்கு பணம் செலுத்துகின்றனர். இந்த நவீன கால மன்னார் அண்ட் கம்பெனிகளுக்கு ‘பிரடென்டு ஒர்க் கம்பெனி’ (Pretend to Work Company) என்று பொதுவான பெயரும் இருக்கிறது.
ஒரு போலி அலுவலகத்துக்குச் செல்லும் 30 வயது இளைஞர் ஒருவர், “நான் உணவுத் தொழில் நடத்தினேன். 2024-ல் அது படுதோல்வி அடைந்தது. இப்போது டோங்குவான் நகரிலுள்ள இந்த கம்பெனிக்கு தினமும் வேலைக்கு வருவதுபோல் வந்து செல்கிறேன். இதற்காக நாள் ஒன்றுக்கு 30 யுவான் தருகிறேன்” என்றார். இவரைப் போல இன்னும் 5 பேர் இந்த கம்பெனிக்கு வந்து செல்கின்றனர்.
இதுபோன்ற போலி அலுவலகங்கள் சீனாவின் சென்சென், ஷாங்காய், நாஞிங், செங்டூ, குன்மிங் உள்ளிட்ட நகரங்களில் பெருகிக் கிடக்கின்றன. இத்தகைய அலுவலகங்களில் கணினிகள், இணைய சேவை, அலுவல் ஆலோசனை அறை, தேநீர் அறை என எல்லாமே இருக்கின்றன. சில நிறுவனங்கள், அங்கே வருபவர்களுக்கு உணவு, ஸ்நாக்ஸ், தேநீர் போன்ற பானங்களையும் தருகின்றன. இந்த அலுவலகங்களுக்கு வரும் வேலையில்லா இளைஞர்கள், 8 மணி நேரத்தையும் வேலை தேடுவதற்காக செலவிடலாம். இல்லை ஏதேனும் ஸ்டார்ட் அப் பற்றி அங்கே ஆலோசிக்கலாம்.
பெருகிவரும் இந்த போலி அலுவலகங்கள் பற்றி, சீன பொருளாதாரம் பற்றி நன்கறிந்த பேராசிரியர் ஒருவர் கூறும்போது, “வேலை செய்வதுபோல் காட்டிக்கொள்வது இப்போதெல்லாம் சர்வ சாதாரணமாகிவிட்டது. பொருளாதார நிலை மாற்றம், கல்விக்கும் வேலைவாய்ப்பு சந்தைக்கும் இடையேயான இடைவெளி காரணமாக இத்தகைய நிறுவனங்கள் நிறைய உருவாகின்றன. ஒருவகையில் இளைஞர்கள் தங்களின் அடுத்த இலக்கு குறித்த தீவிர யோசனைகளுக்கு இந்த இடத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால், இது ஓர் இடைக்கால தீர்வாக மட்டுமே இருக்கலாம்” என்கிறார்.
இத்தகைய போலி அலுவலகத்துக்கு வந்து செல்லும் சீன இளைஞர் ஒருவர், “நான் இந்த நிறுவனத்துக்கு கடந்த 4 மாதங்களாக வந்து செல்கிறேன். இந்த அலுவலக சூழல் நான் ஓர் ஒழுங்கை கடைப்பிடிக்க உதவுகிறது. நான் இந்த அலுவலகத்தில் பெரும்பாலான நேரத்தை வேலை தேடுவது, அதற்கு விண்ணப்பிப்பதற்கே பயன்படுத்துகிறேன்” என்றார்.
ஷாங்காயை சேர்ந்த ஓர் இளம்பெண், இதுபோன்ற போலி அலுவலகத்தில் பதிவு செய்துள்ளார். அவர் சார்ந்த பல்கலைக்கழகம், அங்கு படிப்பை முடித்த மாணவர்கள் ஓராண்டுக்குள் வேலை அல்லது இன்டர்ன்ஷிப் பெற்றதற்கான சான்றிதழை கொடுக்காவிட்டால் பட்டம் வழங்காது என்பதால், அவர் இத்தகைய அலுவலகத்தில் இணைந்துள்ளார். இந்த நிறுவனத்துக்கு கட்டணம் செலுத்த இவர் ஆன்லைன் நாவல்கள் எழுதும் பணியை செய்கிறார்.
சீனாவின் போலி அலுவலகங்கள் பற்றி நிபுணர்கள் கூறும்போது, “இத்தகைய போலி அலுவலகங்கள், வேலைவாய்ப்பின்மை மீது சீனாவின் பெருகிவரும் விரக்தி, சக்தியின்மையையே காட்டுகிறது” என்கின்றனர். ஆனால், இத்தகைய போலி அலுவலகத்தை நடத்தும் சீன இளைஞர் ஒருவர், “நான் நடத்துவம் ஆக்கபூர்வமான செயல்பாடுகள் நிகழும் நிறுவனம் அல்ல. ஆனால், இவை இந்த இளைஞர்கள் உதவாகரைகள் என்று முத்திரை குத்தப்படுவதில் இருந்து அவர்களை தப்புவிக்கும் நிறுவனம்” என்கிறார்.
ஒரு புள்ளிவிவர தரவானது, இத்தகைய நிறுவனங்களுக்கு வரும் 40% இளைஞர்கள் பல்கலைக்கழகங்களில் பட்டச் சான்றிதழை பெறுவதற்காக வேலை / இன்டர்ன்ஷிப் தேடுபவர்கள், எஞ்சிய 60% பேர் சுயாதீன வேலையாட்கள். இவர்களின் வயது பெரும்பாலும் 25-ல் இருந்து 30-க்குள் இருக்கிறது என்று தெரிகிறது. ஒரு போலி அலுவலகத்தின் தலைவர் கூறும்போது, “நான் வேலையில்லாதவர்களுக்கு அவர்கள் தேடும் கவுரவத்தை விற்பனை செய்கிறேன். இந்த அலுவலகம் போலியானது. ஆனால், இது நிறைய பேருக்கு ஒரு தொடக்கப் புள்ளியாக அமைந்திருக்கிறது” என்கிறார்.
சீனாவில் பெருகிவரும் வேலைவாய்ப்பின்மையால் அங்கே சில இளைஞர்கள் தங்களது தகுதிக்கு குறைவான அல்லது குறைவான சம்பளத்துக்கு வேலை செய்கின்றனர். இன்னும் சிலர் தங்கள் பெற்றோரின் ஓய்வூதியத்தில் வாழ்ந்து கொண்டு வயதான பெற்றோருக்கு சேவை செய்வதையே முழுநேர வேலையாக்கிக் கொண்டுள்ளனர். இது சீனாவில் ஒரு புதுவித உழைக்கும் வர்க்கத்தை உருவாக்கியுள்ளதாக விமர்சனங்கள் எழுந்து வருகிறது.
கற்க வேண்டிய பாடம்! – தங்கவேலுவின் மன்னார் அண்ட் கம்பெனி போன்ற இந்த போலி நிறுவனங்கள் பற்றிய செய்தி வாசித்து கடந்து செல்ல என்னவோ விறுவிறுப்பாக இருக்கலாம், ஆனால், இது தாங்கி நிற்கும் சிக்கல்கள் சீனாவில் மட்டுமல்ல உலகம் முழுவதுமே அலசி ஆராயப்பட வேண்டியது.
கல்வி ஒரு சமூகத்தின் தரத்தை உயர்த்தும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால், கல்விக்குப் பின்னர் கிடைக்கும் வேலைவாய்ப்பு தான் பொருளாதாரத்தை வளர்க்கும். எனவே, கல்விக்கும் அது வேலைவாய்ப்புச் சந்தையில் ஏற்படுத்தும் பணி வாய்ப்புகளுக்கும் இடையேயான இடைவெளி குறைக்கப்பட வேண்டும். இதுபோன்ற முன்னெடுப்புகள் தான் ஒரு நாட்டின் வேலைவாய்ப்பின்மையை குறைக்கும்.
மாணவர்கள் படிக்கும் படிப்புக்கும், அவர்கள் வேலை தேடும்போது தேவைப்படும் திறன்களுக்கும் இடையே ஏற்படும் இந்த இடைவெளிதான் இளைஞர்களின் வேலைவாய்ப்பை பாதிக்கிறது. அதற்குக், காலாவதியான படத்திட்டங்களை மாற்றுதல், கல்வியோடு திறன் சார்ந்த பயிற்சிகள் அளித்தல், நாட்டின் தொழில்துறைக்கும் கல்வி நிறுவனங்களுக்கும் இடையே ஒத்துழைப்பு ஏற்படுத்துதல் போன்றவற்றை செயல்படுத்துவது அவசியம் என்கிறார்கள் நிபுணர்கள்.