சென்னை: ஒரு சூரியன், ஒரு சந்திரன் என்பது போல ஒரு எம்ஜிஆர், ஒரு ஜெயலலிதா, ஒரு கருணாநிதி, ஒரு விஜயகாந்த் தான் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்தார். தேமுதிக பொருளாளரும், பிரேமலதாவின் சகோதரருமான எல்.கே.சுதீஷ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடன் பிரேமலதா இருப்பது போன்ற புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவை தொடர்ந்து அதிமுக கூட்டணிக்கு தேமுதிக செல்லப் போகிறதா என்ற விவாதங்கள் எழுந்தன. இந்நிலையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா போல ஒரு கட்சி பொதுச்செயலாளராக அரசியலில் சிங்க பெண்ணாக தனது சகோதரி இருக்கிறார் என்பதை குறிப்பிட்டே அவர் பதிவிட்டுள்ளதாக பிரேமலதா தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை வளாக நுழைவாயிலில் நடைபெற்று வரும் தூய்மை பணியாளர்களின் போராட்டத்திற்கு நேற்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.
பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: தூய்மை பணியாளர்களின் கோரிக்கைக்கு நாங்கள் துணை நிற்போம். அரசாங்கம் சொன்ன வாக்குறுதியை நிறைவேற்றி அவர்களுக்கு நிரந்தர பணி வழங்க வேண்டும். நேற்று முன்தினம் தனியார் நிறுவனம் நடத்திய நிகழ்ச்சியில் ஆளுமை மிக்க பெண் அரசியல்வாதி என்ற விருதை எனக்கு அளித்தார்கள்.
அப்போது பேசிய சுதீஷ், அதிமுக பொதுச் செயலாளராக ஜெயலலிதா சிங்க பெண்ணாக இருந்தார். அதற்குப் பிறகு எனது சகோதரி இன்றைக்கு ஒரு கட்சியின் பொதுச்செயலாளராக முழுவதுமாக அரசியலில் ஈடுபட்டு சிங்க பெண்ணாக இருக்கிறார் என்று கூறினார். தொண்டர்கள் என்னையும் ஜெயலலிதாவையும் இனைத்து ஒரு புகைப்படத்தை பகிர்ந்தார்கள். அதை சுதீஷ் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்தார்.
ஒரு சூரியன், ஒரு சந்திரன் என்பது போல, ஒரு எம்ஜிஆர், ஒரு ஜெயலலிதா, ஒரு கருணாநிதி, ஒரு விஜயகாந்த் தான். அவர்களின் இடத்தை யாரும் நிரப்ப முடியாது. அதேபோல் ஒரு பிரேமலதா தான். என்னுடைய இடத்தையும் யாரும் நிரப்ப முடியாது. விஜயகாந்த் இல்லாதபோதும் அவர் எனக்கு கொடுத்த பயிற்சி நம்பிக்கை வீரியம் என உறுதியுடன் இன்றும் விஜயகாந்த் வழியில் நானும் எங்கள் தொண்டர்களும் பயணித்துக் கொண்டிருக்கிறோம்.
எனவே இங்கு ஒருத்தருக்கு பதில் யாரும் வர முடியாது. ஜெயலலிதா ஒரு இரும்பு பெண்மணி. முதல்வராக இருந்து பல சாதனைகள் செய்தவர். எவ்வளவோ சவால்களை சந்தித்தவர். ஜெயலலிதா எனது அரசியல் ரோல் மாடல் என்று ஏற்கெனவே நான் தெரிவித்து இருக்கிறேன். விஜயகாந்த் எம்ஜிஆரை தனது மானசீக குருவாக கொண்டவர்.
இன்றும் தலைமை அலுவலகத்தில் எம்ஜிஆரின் சிலையும் புகைப்படமும் உள்ளது. அரசியலில் எங்களுக்கு மானசீக குரு விஜயகாந்த் தான் என்று சொல்பவர்கள் அவர் படத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். அதற்கு தேமுதிக அனுமதி வழங்கும். சுவரொட்டிகளிலும் சமூக வலைதளங்களில் மட்டுமே விஜயகாந்த் படத்தைப் பயன்படுத்தக் கூடாது என்று நாங்கள் கூறுகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.