அமராவதி: ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி தேர்தல் அறிக்கையில் கூறியபடி பெண்களுக்கான இலவச அரசு பேருந்து பயண திட்டம் ‘ஸ்ரீ சக்தி’ எனும் பெயரில் வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளது. இதற்கான நிபந்தனைகள் நேற்று வெளியானது.
இதன்படி, பல்ல வெலுகு, (நகர்ப்புறங்களில் இருந்து கிராமங்களுக்கு இயக்கும் பேருந்து) அல்ட்ரா பல்ல வெலுகு, நகர பேருந்துகள், மெட்ரோ எக்ஸ்பிரஸ் மற்றும் எக்ஸ்பிரஸ் ஆகிய 5 பிரிவுகளின் கீழ் இயக்கப்படும் அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம். ஆனால், திருமலை-திருப்பதி இடையே இயக்கப்படும் சப்தகிரி எக்ஸ்பிரஸ் அரசு பேருந்துகளில் இந்த திட்டம் செல்லாது.
இதே போன்று, நான் – ஸ்டாப் பேருந்துகள், அல்ட்ரா டீலக்ஸ், சூப்பர் லக்ஸரி, ஸ்டார் லைனர், ஏசி பேருந்துகளிலும் இந்த திட்டம் செல்லாது. கண்டக்டர் சட்டை மற்றும் பேருந்துகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. பேருந்து நிலையங்களில் அடிப்படை வசதிகள் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கான புதிய ஆணையை ஆந்திர மாநில போக்குவரத் துறை முக்கிய செயலர் காந்திலால் தண்டே நேற்று பிறப்பித்துள்ளார்.