சென்னை: சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்று வருகிறது. 5-வது நாளான நேற்று 5-வது சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன. மாஸ்டர்ஸ் பிரிவில் நெதர்லாந்தின் அனிஷ் கிரி, இந்திய கிராண்ட் மாஸ்டரான முரளி கார்த்திக்கேயனுடன் மோதினார். இந்த ஆட்டம் 73-வது நகர்த்தலின் போது டிராவில் முடிவடைந்தது.
இந்திய கிராண்ட் மாஸ்டரான விதித் குஜராத்தி, ஜெர்மனி கிராண்ட் மாஸ்டரான வின்சென்ட் கீமருடன் பலப்பரீட்சை நடத்தினார். இந்த ஆட்டம் 40-வது நகர்த்தலின் போது டிராவில் முடிவடைந்தது. உலகின் 5-ம் நிலை வீரரான இந்தியாவின் அர்ஜுன் ரிகைச,. சகநாட்டைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டரான பி.பிரணவுடன் மோதினார். இந்த ஆட்டம் 78-வது நகர்த்தலின் போது டிரா ஆனது.
இந்திய கிராண்ட் மாஸ்டரான நிஹால் சரின், அமெரிக்காவின் அவாண்டர் லியாங்குடன் மோதி ஆட்டம் 29-வது நகர்த்தலின் போது டிராவில் முடிவடைந்தது. நெதர்லாந்தின் ஜோர்டன் வான் பாரஸ்ட், அமெரிக்க கிராண்ட் மாஸ்டரான ரே ராப்சனுடன் பலப்ரீட்சை நடத்தினார். இதில் ஜோர்டான் வான் பாரஸ்ட் 82-வது நகர்த்தலின் போது வெற்றி பெற்றார்.
5 சுற்றுகளின் முடிவில் மாஸ்டர்ஸ் பிரிவில் வின்சென்ட் கீமர் 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். அர்ஜுன் எரிகைசி 3 புள்ளிகளுடன் 2-வது இடம் வகிக்கிறார். அனிஷ் கிரி, விதித் குஜராத்தி, முரளி கார்த்திக்கேயன், அவோண்டர் லியாங் ஆகியோர் தலா 2.5 புள்ளிகளுடன் 3 முதல் 6-வது இடங்களில் உள்ளனர். நிஹால் சரின் (2), வி.பிரணவ் (2), ரே ராப்சன் (2), ஜோர்டான் வான் பாரஸ்ட்(1) ஆகியோர் முறையே 7 முதல் 10-வது இடங்களில் உள்ளனர்.
சேலஞ்சர்ஸ் பிரிவு 5-வது சுற்றில் இந்திய கிராண்ட் மாஸ்டரான ஆர்.வைஷாலி, சர்வதேச மாஸ்டரான ஜி.பி.ஹர்ஷ்வர்தனுடன் மோதினார். இதில் 53-வது நகர்த்தலின் போது ஹர்ஷ்வர்தன் வெற்றி பெற்றார்.
ஹரிகா துரோணவல்லி, அபிமன்யு புராணிக்குடன் மோதினார்.இதில் அபிமன்யு புராணிக் 39-வது நகர்த்தலின் போது வெற்றி பெற்றார். எம்.பிரனேஷ், லியோன் லூக் மென்டோன்கா மோதிய ஆட்டம் 38-வது நகர்த்தலின் போது டிராவில் முடிவடைந்தது. அதிபன் பாஸ்கரன், ஆர்யன் சோப்ரா மோதிய ஆட்டம் 52-வது நகர்த்தலின் போது டிரா ஆனது. திப்தாயன் கோஷ், பா.இனியனுடன் பலப்பரீட்சை நடத்தினார். இந்த ஆட்டம் 25-வது நகர்த்தலின் போது டிரா ஆனது.
5 சுற்றுகளின் முடிவில் சேலஞ்சர்ஸ் பிரிவில் அபிமன்யு புராணிக் 4.5 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். எம்.பிரனேஷ், திப்தாயன் கோஷ், லியோன் லூக் மென்டோன்கா ஆகியோர் தலா 3.5 புள்ளிகளுடன் 2 முதல் 4-வது இடங்களில் உள்ளனர். பா.இனியன் (3), அதிபன் பாஸ்கரன் (2.5), ஆர்யன் சோப்ரா (1.5), ஜி.பி.ஹர்ஷ்வர்தன் (1.5), ஆர்.வைஷாலி (1), ஹரிகா துரோணவல்லி (0.5) ஆகியோர் முறையே 5 முதல் 10-வது இடங்களில் உள்ளனர்.