புதுடெல்லி: தமிழகத்தின் கீழடியில் கடந்த 2014-15 மற்றும் 2015-16-ம் ஆண்டுகளில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சி குறித்த அறிக்கை கடந்த 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் இந்திய தொல்லியல் துறை வாயிலாக பெறப்பட்டுள்ளது என்றும், இந்த அறிக்கை துறை சார்ந்த நிபுணர்களின் பரிசீலனையில் உள்ளது என்றும் மத்திய கலாச்சாரத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்துள்ளார். மேலும், கீழடி அகழாய்வு முறைகளில் குறைபாடுகள் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அவர், “கீழடி அகழ்வாராய்ச்சி அறிக்கை குறித்த பரிசீலனை நடைமுறைகள் அதன் பணிசார்ந்த ஒருங்கிணைப்பை உறுதி செய்ய வேண்டியது அவசியமானது. இந்த ஆராய்ச்சிகளின் மூலம் கண்டறியப்பட்ட குறிப்பிடத்தக்க முடிவுகள் தொடர்பாக குறை காண்பதற்கோ, அல்லது அந்த அறிக்கையை வெளியிடுவதில் காலதாமதம் செய்யும் நோக்கமோ இல்லை.
முதல் இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்ட இந்த அகழ்வாராய்ச்சி குறித்த அறிக்கைகள் நிபுணர்களின் பரிசீலனையில் இருக்கிறது. கீழடி அகழ்வாராய்ச்சி நடத்தப்பட்ட முறைகள், காலவரிசை, விளக்கம், முன்னிலைப்படுத்துதல் மற்றும் விரிவான பகுப்பாய்வுகள் போன்ற அம்சங்களில் குறைபாடுகள் காணப்படுகிறது. இது தொடர்பான விவரங்கள் அகழாய்வில் ஈடுபட்டுள்ள குழுவின் தலைமைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
2014 முதல் 2017-ம் ஆண்டுகளுக்கு இடையே கீழடி பகுதியில் தொல்லியல் சார்ந்த பொருட்கள் இருப்பதற்கான வாய்ப்புகளைக் கருத்தில் கொண்டு இந்திய தொல்லியல் துறை அகழாய்வுப் பணிகளை மேற்கொண்டது. 2018-ம் ஆண்டு முதல் தமிழகத்தைச் சேர்ந்த தொல்லியல் துறை தொடர்ந்து இந்தப் பகுதியில் அகழாய்வுப் பணிகளை மேற்கொண்டு வந்தது. எனினும், இந்த அகழாய்வுப் பணிகள் தொடர்பான இறுதி அறிக்கை மாநில அரசிடம் இருந்து இதுவரை வெளியிடப்படவில்லை” என்று மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்தார்.
முன்னதாக, கீழடியில் நடத்தப்பட்ட ஆய்வின் அறிக்கை, மத்திய தொல்லியல் துறையிடம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த ஆய்வறிக்கையை அங்கீகரிக்காமல், திருத்தம் கோரி மத்திய அரசு திருப்பி அனுப்பியது குறிப்பிடத்தக்கது. அது குறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவு ஒன்றில், “கீழடி அகழாய்வில் இருந்து உலக அளவிலான ஆய்வகங்களுக்கு அனுப்பி, கரிமப் பகுப்பாய்வில் காலக்கணக்கீடு செய்யப்பட்ட மாதிரிகள், ஏஎம்எஸ் (AMS) அறிக்கைகளை அளித்த பின்னரும் மேலும் சான்றுகள் தேவை என்கிறார்கள் அவர்கள்.
இதற்கு நேர்மாறாக, மதிப்புமிக்க வரலாற்றாய்வாளர்கள், தொல்லியல் அறிஞர்கள் கடுமையாக எதிர்க்கும் நிலையிலும் கற்பனையான சரஸ்வதி நதி நாகரிகத்தை பாஜக ஆதரிக்கிறது. எந்த நம்பத்தகுந்த சான்றும் இல்லாமல் இதனை அவர்கள் முன்னெடுக்கிறார்கள். ஆனால், நாம் கடுமையான பரிசோதனைகள் மூலம் நிறுவியுள்ள தமிழ்ப் பண்பாட்டின் தொன்மையைப் புறந்தள்ளுகிறார்கள்.
கீழடி மற்றும் தமிழ் மரபுசார் உண்மையைப் பொறுத்தவரை பாஜக – ஆர்எஸ்எஸ் கும்பல் கதறுவது சான்றுகள் இல்லை என்பதால் அல்ல, கீழடி காட்டும் உண்மை அவர்கள் முன்னெடுக்கும் ‘ஸ்க்ரிப்ட்’-க்கு எதிரானதாக இருப்பதால்தான். எங்கள் வரலாற்றை வெளிக்கொணர பல நூறாண்டுகள் போராடினோம். அதனை எப்படியாவது மறைத்து அழிக்க ஒவ்வொரு நாளும் அவர்கள் முயல்கிறார்கள். எல்லாவற்றையும் உலகம் உற்று நோக்கிக் கொண்டுதான் இருக்கிறது. காலமும் கூட” என்று கூறியிருந்தது நினைவுகூரத்தக்கது.