புதுடெல்லி: அணு ஆயுத தாக்குதல் குறித்த பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஃபீல்டு மார்ஷல் அசிம் முனீரின் கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள மத்திய அரசு, தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த இந்தியா அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என தெரிவித்துள்ளது.
அமெரிக்கா சென்றுள்ள பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிமர் முனீர், அந்நாட்டில் வாழும் பாகிஸ்தானியர்கள் மத்தியில் வாஷிங்டனில் உரையாற்றினார். அப்போது, இந்தியா உடனான எதிர்கால போரில் பாகிஸ்தானின் இருத்தலுக்கு அச்சுறுத்தல் ஏற்படுமானால் நாங்கள் அணு ஆயுத தாக்குதலை நடத்துவோம் என அவர் கூறியுள்ளார். நாங்கள் ஒரு அணுசக்தி நாடு. நாங்கள் வீழ்ச்சியடைகிறோம் என்று நினைத்தால் எங்களுடன் சேர்ந்து உலகத்தின் பாதியை வீழ்த்துவோம் என்று அவர் கூறியதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
அசிம் முனீரின் இந்தக் கருத்து குறித்து வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் ராணுவத் தளபதி தெரிவித்ததாகக் கூறப்படும் கருத்துக்கள் மீது இந்தியா கவனம் செலுத்துகிறது. அணு ஆயுத அச்சுறுத்தலை விடுப்பது பாகிஸ்தானுக்கு வழக்கமானதே. இத்தகைய கருத்துகளில் காணப்படும் பொறுப்பற்ற தன்மை குறித்து சர்வதேச சமூகம் தனது சொந்த முடிவுகளை எடுத்துக்கொள்ள முடியும்.
பயங்கரவாத குழுக்களுடன் ராணுவம் கைகோத்து செயல்படும் ஒரு நாட்டில் அணுசக்தி கட்டளை மற்றும் கட்டுப்பாட்டின் நிலை குறித்து நிலவும் சந்தேகங்களை இத்தகைய பேச்சுக்கள் வலுப்படுத்துகின்றன. அதிலும், இப்படி ஒரு கருத்து நட்பாக உள்ள மூன்றாவது நாட்டின் மண்ணில் இருந்து கூறப்பட்டிருப்பது வருந்தத்தக்கது. அணு ஆயுத அச்சுறுத்தலுக்கு அடிபணிய மாட்டோம் என்று இந்தியா ஏற்கெனவே தெளிவுபடுத்தி உள்ளது. நமது தேசிய பாதுகாப்பை வலுப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் தொடர்ந்து எடுப்போம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, வாஷிங்டன் டி.சியில், டம்பாவில் பாகிஸ்தானின் கவுரவ தூதர் அட்னான் ஆசாத் நடத்திய கருப்பு-டை இரவு விருந்தில் பங்கேற்ற அசிம் முனீர், “சிந்து நதி இந்தியர்களின் குடும்ப சொத்து அல்ல. சிந்து ஆற்றை நிறுத்துவதற்கான இந்திய திட்டங்களை தடுப்பதற்கான ஆற்றல் எங்களிடம் உள்ளது. சிந்து நதியில் இந்தியா அணை கட்டுவதைத் தொடர்ந்தால், பாகிஸ்தான் தனது நீர் உரிமைகளை எந்த விலை கொடுத்தும் பாதுகாக்கும். இந்தியா ஒரு அணை கட்டும் வரை நாங்கள் காத்திருப்போம், அவர்கள் அவ்வாறு செய்யும்போது, அதை அழித்துவிடுவோம்.
காஷ்மீர் பாகிஸ்தானின் ‘கழுத்து நரம்பு’. அது இந்தியாவின் உள் விவகாரம் அல்ல, தீர்க்கப்படாத சர்வதேச பிரச்சினை. ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்பது பாகிஸ்தானின் இறையாண்மையின் மீதான இந்தியாவின் கடுமையான மீறல்” என்று அவர் பேசியதாக தி டானில் இன்று வெளியிடப்பட்ட செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.