சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘மதராஸி’ படத்தின் கதைக்களம் என்னவென்று தெரியவந்துள்ளது.
சமீபத்திய பேட்டியொன்றில் “‘கஜினி’ மாதிரி திரைக்கதையும், ‘துப்பாக்கி’ மாதிரி ஆக்ஷன் காட்சிகளும் கொண்ட படமே ‘மதராஸி’” என்று தெரிவித்திருந்தார் ஏ.ஆர்.முருகதாஸ். ‘கூலி’ வெளியீட்டிற்காக ‘மதராஸி’ படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகள் தொடங்கப்படாமல் இருக்கிறது. தற்போது வெளிநாட்டு தணிக்கை பணிகளில் இருந்து ‘மதராஸி’ படத்தின் கதைக்களம் என்னவென்று இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
அதன்படி, “‘மதராஸி’ ஒரு அதிரடியான காதல் கதை. தமிழ்நாட்டில் பணிபுரியும் ஒரு சிறப்பு குழுவுக்கும், சக்திவாய்ந்த வட இந்திய மாஃபியாவுக்கும் இடையே நடக்கும் மோதல்தான் படம். இந்த மோதலுக்கு இடையே காதல், பழிவாங்குதல், தியாகம் போன்றவை ஆழமாக இருக்கும்” என்று படக்குழு தெரிவித்துள்ளது. இதனை வைத்து சிவகார்த்திகேயன் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள ‘மதராஸி’ படத்தில் சிவகார்த்திகேயன், வித்யூத் ஜாம்ப்வால், பிஜு மேனன், ருக்மணி வசந்த், விக்ராந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இசையமைப்பாளராக அனிருத் பணிபுரிந்து வரும் இப்படம் ஏ.ஆர்.முருகதாஸை மீண்டும் வெற்றி பாதையில் நிலைநிறுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.