திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு அடுத்த களாம்பாக்கத்தைச் சேர்ந்த தனுஷ், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த விஜயஸ்ரீ காதல் திருமண விவகாரத்தில் தனுஷின் 17 வயது தம்பி, கடந்த ஜூன் 6-ம் தேதி நள்ளிரவில் கடத்தப்பட்டார்.
இச்சம்பவம் தொடர்பாக கைதான 7 பேரில், விஜயஸ்ரீயின் தந்தை வனராஜா, உறவினர்கள் கணேசன், மணிகண்டன் ஆகியோர், திருவள்ளூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு 3 முறை மனு தாக்கல் செய்திருந்தனர்.
அந்த மனுக்கள் தள்ளுபடியானது. இந்நிலையில், 4-வது முறையாக வனராஜா, கணேசன், மணிகண்டன் ஆகிய 3 பேரும் திருவள்ளூர் நீதித்துறை நடுவர் -1 நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவை விசாரித்த, நீதித்துறை நடுவர் -1 நீதிமன்றம் வனராஜா உள்ளிட்ட 3 பேருக்கும் நேற்றுமுன்தினம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
14-ம் தேதி விசாரணை: மேலும், இந்த வழக்கில் சிறையில் உள்ளோரில், பணிநீக்கம் செய்யப்பட்ட காவலர் மகேஸ்வரி, வழக்கறிஞர் சரத்குமார் ஆகியோர் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்துள்ள மனு, வரும் 14-ம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது..
அதுமட்டுமல்லாமல், சிறுவன் கடத்தல் தொடர்பாக குற்றம்சாட்டப்பட்ட புரட்சி பாரதம் கட்சி தலைவரும், கே.வி.குப்பம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான பூவை ஜெகன் மூர்த்தி, ஏடிஜிபி ஜெயராம் ஆகிய இருவரில், பூவை ஜெகன் மூர்த்திக்கு முன்ஜாமீன் வழங்கியும், ஏடிஜிபி ஜெயராம் மீதான கைது உத்தரவை ரத்து செய்தும் ஏற்கனவே உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.