புதுடெல்லி: மத்திய தொலைத்தொடர்புத் துறை சஞ்சார் சாத்தி என்ற செயலியை கடந்த ஜனவரி 17-ம் தேதி அறிமுகம் செய்தது. இது ஆங்கிலம், இந்தி மற்றும் 21 பிராந்திய மொழிகளில் கிடைக்கிறது.
இந்த செயலி, பயனர்கள் தங்கள் அழைப்பு அல்லது குறுஞ்செய்தி பதிவுகளிலிருந்து சந்தேகத்துக்கிடமான அழைப்புகள் அல்லது செய்திகளை நேரடியாக புகார் அளிக்க உதவுகிறது. அத்துடன் தொலைந்துபோன அல்லது திருடுபோன செல்போன்களை கண்காணித்து மீட்க அல்லது முடக்கவும் உதவுகிறது.
இந்த செயலி அறிமுகம் செய்யப்பட்டது முதல் இதுவரை காணாமல் போன 1 கோடிக்கும் மேற்பட்ட செல்போன் இணைப்புகளை துண்டித்துள்ளது. மேலும் 29 லட்சத்துக்கும் மேற்பட்ட செல்போன் இணைப்புகளை செயலிழக்கச் செய்துள்ளது. திருடு போன 5.35 லட்சத்துக்கும் மேற்பட்ட செல்போன்களை மீட்க இந்த செயலி உதவி உள்ளது. இந்த செயலியை இதுவரை 50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். சஞ்சார் சாத்தி இணையதளத்தை இதுவரை 16.7 கோடி பேர் பார்த்துள்ளனர்.