“குற்றப்புலனாய்வு த்ரில்லர் படங்களை ஏற்கெனவே பார்த்திருப்போம். அதுல இருந்து மாறுபட்ட ஒரு படமா, ‘இந்திரா’ இருக்கும். இதை என்னால உறுதியா சொல்ல முடியும்” என்கிறார், அறிமுக இயக்குநர் சபரீஷ் நந்தா. வசந்த் ரவி ஹீரோவாக நடித்திருக்கும் இந்தப் படத்தில் மெஹ்ரின் பிர்சாடா நாயகி. தெலுங்கு நடிகர் சுனில், அனிகா சுரேந்திரன், கல்யாண் மாஸ்டர் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஜேஎஸ்எம் மூவி புரொடக்ஷன் மற்றும் எம்பரர் என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இந்தப் படத்தை டிரைடன்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் ஆக.22-ம் தேதி வெளியிடுகிறார்.
‘இந்திரா’ என்ன கதை?
இது, ராட்சசன், போர்த்தொழில் மாதிரி க்ரைம் த்ரில்லர் படம். வசந்த் ரவி போலீஸா நடிச்சிருக்கார். படம் ஆரம்பிச்ச கொஞ்ச நேரத்துலயே அவருக்குப் பார்வை போயிடும். அது ஏன் அப்படிங்கறது சஸ்பென்ஸ். பார்வை போனதால போலீஸ் துறையை விட்டு வெளியே வந்திடறார். அந்தப் பார்வை குறைபாட்டோடு குற்றவாளிகளை அவர் எப்படி கண்டுபிடிக்கிறார் அப்படிங்கறது கதை.
‘இந்திரா’ங்கற டைட்டில் ஏன்? நாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட கதையா?
இது அது மாதிரியான கதை இல்லை. நன்மைக்கும் தீமைக்குமான மோதல் அப்படிங்கற மாதிரியான லைன் இது. ஹீரோ பெயர் இந்திரன். முதல்ல ‘ராஜாவின் பார்வையிலே’ என்ற தலைப்பை வைக்கலாம்னு நினைச்சோம். முடியலை. ஓடிடி வந்த பிறகு எல்லா மொழிக்கும் போய் சேர்ற மாதிரி தலைப்பு வைக்க வேண்டியிருக்கு. ‘இந்திரா’ அதுக்குப் பொருத்தமா இருந்ததால அதையே வச்சோம்.
‘இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர்’னா, ஒரு கொலை நடக்கும், போலீஸ் விசாரிப்பாங்க. இதுதான் வழக்கமானதா இருக்கும்… இதுல வேற என்ன வித்தியாசத்தை எதிர்பார்க்கலாம்?
உண்மைதான். பொதுவா இதுபோன்ற படங்களுக்கு திரைக்கதைதான் முக்கியம். த்ரில்லர் படங்கள்ல, கொலைகாரன் யாரு, வில்லன் யாருன்னு முதல்லயே காண்பிக்க மாட்டாங்க. இதுல நாங்க சுனில்தான் வில்லன்னு ஆரம்பத்துலயே பார்வையாளர்களுக்கு காண்பிச்சிருவோம். அதுக்கு பிறகு என்ன சுவாரஸ்யம்னு கேட்டீங்கன்னா, அது ஈகோ. அதுதான் மொத்தப் படமும். ‘அய்யப்பனும் கோஷியும்’ பார்த்தீங்கன்னா, பிருத்விராஜுக்கும் பிஜு மேனனுக்குமான ஈகோ, எப்படி கடைசி வரை போகுமோ, அது மாதிரி இதுலயும் இருக்கும். ஒவ்வொரு பத்து நிமிஷத்துக்கு இடையிலயும் ஒரு ஆச்சரியத்தை திரைக்கதையில பார்க்கலாம். இடைவேளைக்கு முன்னும் பின்னுமே நிறைய வேறுபாட்டு இருக்கும்.
போஸ்டர்ல முத்தக்காட்சியை போட்டிருந்தீங்களே…பரபரப்புக்காகவா?
இல்லை. ஹீரோ காதலிச்சு திருமணம் பண்ணிக்கிறார். அப்ப இரண்டு பேருக்குமான, முத்தக்காட்சியிலதான் திருப்பம் ஒன்னு நடக்குது. கதை அங்கிருந்து ‘டேக் ஆஃப்’ ஆகுதுன்னு சொல்லலாம். அதுக்காக வைக்கப்பட்ட காட்சி அது. போஸ்டர் பண்ணும்போது அதை இயல்பாவே வச்சோம். அதுல பரபரப்புன்னு ஏதுமில்லை.
த்ரில்லர் படங்களுக்கு இசை முக்கியமாச்சே?
கண்டிப்பா. ‘சொப்பன சுந்தரி’ படத்துக்கு இசை அமைச்ச அஜ்மல், இதுக்கு பண்ணியிருக்கார். பின்னணி இசையை புடாபெஸ்ட் போயி பண்ணியிருக்கோம். முதல் காட்சியில இருந்து கடைசிவரை இசையின் ‘டெம்போ’ ரொம்ப சிறப்பா இருக்கும். நான்கு பாடல்கள் இருக்கு. எல்லாமே வித்தியாசமா இருக்கும். அதோட ஆக் ஷன் காட்சிகளை ரொம்ப மெனக்கெட்டு பண்ணியிருக்கோம். வசந்த் ரவி, கடுமையா உழைச்சிருக்கார். அந்தக் காட்சிகள் ஸ்டைலா இருக்கும்.