சென்னை: பேச்சுவார்த்தையில் தீர்வு கிடைக்காத நிலையில் 10-வது நாளாக நேற்றும் ரிப்பன் மாளிகை முன்பு தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை மாநகராட்சியில் ராயபுரம், திரு.வி.க.நகர் மண்டலங்களில் தூய்மைப் பணிகளை தனியாருக்கு விட்டதை கண்டித்தும், பணி நிரந்தரம் கோரியும், ஏற்கெனவே என்யூஎல்எம் திட்டம் மூலம் வழங்கப்பட்ட தூய்மைப் பணியை தொடர வலியுறுத்தியும் தூய்மைப் பணியாளர்கள் ரிப்பன் மாளிகை முன்பு, இரவு, பகலாக அங்கேயே தங்கி, நேற்றும் 10வது நாளாக போராட்டத்தை தொடர்ந்தனர்.
இதுவரை 6 கட்ட பேச்சுவார்த்தைகள் முடிந்து, தீர்வு எட்டப்படவில்லை. இந்நிலையில், அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில், மேயர் ஆர்.பிரியா, ஆணையர் ஜெ.குமரகுருபரன் ஆகியோர் முன்னிலையில் 7-ம் கட்ட பேச்சுவார்த்தை ரிப்பன் மாளிகையில் நேற்று நடைபெற்றது. இதில் உழைப்போர் உரிமை இயக்க பிரதிநிதிகள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் ஈடுபட்டனர்.
பின்னர் உழைப்போர் உரிமை இயக்க செயலாளர் சுரேஷ் செய்தியாளர்களிடம் கூறும்போது, “இந்த பேச்சுவார்த்தையில் எங்களது கோரிக்கையை பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. எங்களை அப்புறப்படுத்துவதை பற்றி மட்டுமே பேசினர். போராட்டத்தில் ஈடுபட்டு வருவோரிடம், திமுக கவுன்சிலர்கள் பணத்தாசை காட்டி, இந்த போராட்டத்தை கலைக்க பார்க்கின்றனர்” என்றார்.
உழைப்போர் உரிமை இயக்க தலைவர் பாரதி பேசும்போது, “எங்களது கோரிக்கையை ஏற்கும் வரை போராட்டம் தொடரும். போராட்டக்காரர்கள் பணிக்கு திரும்பியதாக வரும் தகவல் அனைத்தும் பொய்” என்றார். இதனிடையே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சண்முகம், போராட்டக்காரர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “நாடு முழுவதும் தனியார் மயமாகி வருகிறது. தமிழகத்திலும் பல்வேறு துறைகள் தனியார் மயமாகிறது. இருப்பினும், ஏற்கெனவே பெற்று வரும் உரிமைகளை பறிப்பதை ஏற்க முடியாது. நியாயமான முறையில் தூய்மை பணியாளர் போராட்டத்துக்கு தீர்வுகாண நாங்கள் முயற்சி மேற்கொள்வோம்’’ என்றார். அதைத் தொடர்ந்து, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், போராட்டக்காரர்களை சந்தித்து முழு ஆதரவை தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: நகரத்தை சுத்தம் செய்யும் பணியை தனியாருக்கு கொடுக்க வேண்டிய அவசியம் என்ன? பின் எதற்காக மாநகராட்சி இருக்கிறது? தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய நிதி இல்லை என்கின்றனர்.
ஆனால் மதுரையில் ரூ.200 கோடியில் மறைந்த முதல்வர் கருணாநிதி பெயரில் நூலகம் கட்டியிருக்கின்றனர். இதுபோன்ற தேவையில்லாத செலவுகள் செய்து பொய்யான வாக்குறுதிகளை கொடுத்துவிட்டு மக்களை ஏமாற்றுவது எந்தவகையில் நியாயம்? இதனால் இன்றைக்கு குப்பை அள்ளும் மக்கள் போராட்ட களத்துக்கு வந்துவிட்டனர். எனவே 2021-ல் கொடுத்த வாக்குறுதிகளை முதல்வர் நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
அதனைத் தொடர்ந்து பாமக பொருளாளர் திலகபாமா போராட்டக்காரர்களை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். ‘தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கையை சமூகநீதிக் கண்ணோட்டத்தில் அரசு பரிசீலிக்க வேண்டும்’ என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார். ‘பேச்சுவார்த்தை எனும் பெயரில் மிரட்டி தூய்மைப் பணியாளர்களின் அறப்போராட்டத்தை கலைக்க முற்படுவது கடும் கண்டனத்துக்குரியது’ என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.