இஸ்லாமாபாத்: பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான் எல்லையை பயன்படுத்த தடை விதித்தது அந்நாட்டு அரசு. இந்திய அரசும் இதே நடவடிக்கையை கையில் எடுத்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஏப்ரல் மாதம் 24-ம் தேதி இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான் எல்லையை பயன்படுத்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அப்போது முதல் கடந்த ஜூன் 30-ம் தேதி வரையிலான காலகட்டத்தில் மட்டும் இதனால் பாகிஸ்தானுக்கு சுமார் 1,240 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இது பாகிஸ்தான் ரூபாய் மதிப்பில் 4.1 பில்லியன். இதை அந்த நாட்டின் செய்தி நிறுவனம் அரசு தரப்பு தகவல் உடன் உறுதி செய்து செய்தியாக வெளியிட்டுள்ளது.
அந்த செய்தியில் இதை பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா முகமது ஆசிப் உறுதி செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. பஹல்காம் தாக்குதலை அடுத்து சிந்து நதி நீரை நிறுத்தியது. இதற்கு எதிர்வினையாற்றும் வகையில் பதிவு செய்யப்பட்ட இந்திய விமானங்கள், இந்திய விமான நிறுவனங்கள் சார்பில் இயக்கப்படும் விமானங்கள் என இந்திய தொடர்பு கொண்ட அனைத்து விமானங்களுக்கும் பாகிஸ்தான் தடை விதித்தது.
இதன் காரணமாக பாகிஸ்தான் நாட்டின் வான் போக்குவரத்து சுமார் 20 சதவீதம் குறைந்துள்ளது. இந்த தடை நடைமுறைக்கு வருவதற்கு முன்னர் நாள் ஒன்றுக்கு 100 முதல் 150 இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்தி வந்ததாக தகவல். இப்போது அது முற்றிலுமாக தடைப்பட்டுள்ளது. அதேநேரத்தில் இந்தியாவில் இருந்து அயல்நாடுகளுக்கு செல்லும் இந்திய விமானங்கள் மாற்றுப்பாதையில் தடையின்றி பயணத்தை தொடர்ந்து வருகிறது. மறுபக்கம் பாகிஸ்தானுக்கு இதே உத்தரவை இந்தியா பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஏற்கெனவே நிதி நெருக்கடியால் பாகிஸ்தான் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய வான்வெளியை பாகிஸ்தான் விமான நிறுவனங்கள் பயன்படுத்த முடியாத காரணத்தால் பயண நேர நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளது. குறிப்பாக பாகிஸ்தானில் இருந்து தென்கிழக்கு ஆசியாவுக்கு செல்லும் விமானங்கள் இந்திய வான்வெளியை தவிர்க்க வேண்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.
வரும் 24-ம் தேதி காலை 4.59 மணி வரையில் இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்த தடை உத்தரவு பிறப்பித்துள்ளது அந்த நாட்டு விமான போக்குவரத்து ஆணையம்.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை மூலம் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்கள் மற்றும் அமைவிடங்களை இந்தியா அழித்தது. தொடர்ந்து பாகிஸ்தானின் தாக்குதல் முயற்சியையும் இந்திய முறியடித்தது. பின்னர் இருதரப்புக்கும் இடையில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது.
ஜம்மு – காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலா தளத்தில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம், இந்தியா மட்டுமின்றி சர்வதேச அளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.