ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படம், ‘கூலி’. இதில், சத்யராஜ், நாகார்ஜுனா, ஸ்ருதி ஹாசன், உபேந்திரா, சவுபின் சாஹிர் என பலர் நடித்துள்ளனர். இந்தி நடிகர் ஆமிர்கான், கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். ஆக.14-ல் ரிலீஸாக இருக்கும் இந்தப் படத்தை அடுத்து ‘ஜெயிலர் 2’ படத்தில் நடித்து வருகிறார், ரஜினி. நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார்.
இதையடுத்து ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை, ‘மகாராஜா’ நித்திலன் சாமிநாதன், ஹெச்.வினோத், தெலுங்கு இயக்குநர் விவேக் ஆத்ரேயா ஆத்ரேயா ஆகியோரில் ஒருவர் இயக்க இருப்பதாகக் கூறப்பட்டு வந்தது.
இந்நிலையில், ‘அண்ணாத்த’ படத்தை அடுத்து சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் மீண்டும் நடிக்க இருப்பதாகவும் அதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்தப் படத்தை லிங்குசாமி இயக்கிய ‘த வாரியர்’ படத்தைத் தயாரித்த ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரின் சார்பில் ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.