கோவை: அமெரிக்க அதிபர் மேற்கொண்டு வரும் அதிக வரி விதிப்பு உள்ளிட்ட இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளால் சிறிது காலம் சிரமத்தை எதிர்கொண்டாலும், தடைகளை உடைத்தெறிந்து இந்தியா முன்னேறும் என கோவை தொழில் துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
வார்ப்பட தேசிய அமைப்பான ‘தி இன்ஸ்டியூட் ஆப் இந்தியன் பவுண்டரிமென்’ (ஐஐஎப்) கோவை கிளை முன்னாள் தலைவர் விஸ்வநாதன் கூறும்போது, “பொருளாதாரத்தில் மிக உச்சியில் உள்ள வல்லரசு நாடுகள் கூட மற்ற நாடுகளின் உதவி இல்லாமல் நீண்ட காலம் நிலைத்திருக்க முடியாது. மற்ற நாடுகளின் நிலத்தை ஆக்கிரமிக்க வேண்டும் என்ற நோக்கம் இல்லாத ஒரு நல்லரசு நாடு நமது இந்தியா. எனவே எடுத்தேன், கவிழ்த்தேன் என்ற வகையில் முடிவுகள் எடுக்கும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியா மீது மேற்கொள்ளும் அதிக வரி விதிப்பு போன்ற நடவடிக்கைளால் சிறிது காலம் சிரமப்பட்டாலும் கூடிய விரைவில் இந்த தடைகளை உடைத்தெறிந்து இந்தியா முன்னேறும் என்பதில் எள் முனை அளவும் ஐயமில்லை” என்றார்.
மேலும், தமிழ்நாடு சூரியஒளி ஆற்றல் மின்உற்பத்தியாளர்கள் சங்கத்தின் (டான்ஸ்பா) பொருளாளர் சாஸ்தா எம்.ராஜா கூறும்போது, “அமெரிக்காவுக்கு பொருட்களை ஏற்றுமதி செய்து அதன் மூலம் டாலரில் வருவாய் பெற்று அதை கொண்டு ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் இந்தியா வாங்குவதை தடை செய்வதற்காக அதிபர் தற்போது 50 சதவீத வரி விதித்துள்ளார். ரஷ்யாவிடம் கச்சாய எண்ணெய் குறைந்த விலையில் இந்தியா பெற்று வருகிறது. ஏற்றுமதியை விட கச்சா எண்ணெய் இறக்குமதி மதிப்பு நமக்கு அதிகம். எனவே, நம் நாட்டின் நலனைத்தான் இந்திய அரசு கவனத்தில் கொள்ளும்.
ஜவுளிப் பொருட்களை தவிர்த்து இந்திய ஏற்றுமதியாளர்கள் மற்ற பொருட்களில் பெரிய அளவு லாபம் ஈட்டுவதில்லை. எனவே, அமெரிக்க சந்தையை தவிர்த்து ஆப்பிரிக்க, அரேபிய நாடுகள் மற்றும் வளரும் நாடுகளுக்கு அதிகம் ஏற்றுமதி செய்ய வேண்டும். இங்கிலாந்து நாட்டுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டுக்கு ஏற்றுமதி அதிகரிக்க வேண்டும். ஐரோப்பிய நாடுகளுடன் வரியில்லா ஒப்பந்தம் இந்தியா மேற்கொள்ள வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து, தமிழ்நாடு சிறு தொழில்கள் சங்கத்தின்(டான்சியா) துணை தலைவர் சுருளிவேல் கூறும்போது, “அமெரிக்க அதிபரின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. அதிக வரி விதிப்பால் பல்வேறு தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்படும். இந்திய அரசு விரைவில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு ஏற்றுமதியாளர்களுக்கு உதவும் என நம்புகிறோம்” என்றார்.
கோவை, திருப்பூர் மாவட்ட குறுந்தொழில்முனைவோர் சங்கத்தின் (காட்மா) தலைவர் சிவக்குமார் கூறும்போது, “அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பிடம் இருந்து தொடர்ந்து வர்த்தக ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் தினமும் தெளிவற்ற அறிவிப்புகள் வெளியாகிக் கொண்டே உள்ளன. தற்போது வெளியாகியுள்ள அறிவிப்புகள் வர்த்தக ரீதியாக தற்காலிக பாதிப்புகளையே உண்டாக்கக் கூடியவை.
ஏனென்றால், உலகளவில் அதிக கடின உழைப்பையும், தொழில்நுட்ப அறிவையும் பெற்றுள்ள இளைஞர் வளம் இந்தியாவிடம் உள்ளது. மேலும், உற்பத்தி துறையில் அதிகபட்ச உற்பத்தி திறனையும், தொழில்நுட்ப திறனையும் பெற்றிருக்கிறோம். பொருளாதார ரீதியாகவும் தொழில் ரீதியாகவும் வேகமாக வளர்ந்து வரும் நம் நாட்டின் மீது இவ்வாறான அறிவிப்புகள் திணிக்கப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாது.
இந்தத் தடைகள் இப்போது நெருக்கடியை தருவதாக இருந்தாலும், நம் திறமையால் நாம் விரைவில் மீண்டு வரக்கூடிய தடைகள் தான் என்பதை மனதில் நிறுத்தி, நம் தேச நலன் கருதி பிரதமர் மற்றும் மத்திய அரசு எடுக்கும் முடிவுகளுக்கு எங்கள் சங்கம் என்றென்றும் துணை நிற்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்” என்று அவர் தெரிவித்தார்.