சில வாரங்களுக்கு முன்பு வரை கம்யூனிஸ்டுகளை கூட்டணிக்கு வலிந்து அழைத்துக் கொண்டிருந்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இப்போது அக்கட்சிகளை மிகக் காட்டமாக விமர்சிக்க ஆரம்பித்துள்ளார். கம்யூனிஸ்டுகள் மீது இபிஎஸ்சின் திடீர் பாய்ச்சலுக்கு காரணம் என்ன?
தமிழகத்தில் 2026 தேர்தல் களம் இப்போதே அனலாய் தகிக்க ஆரம்பித்துள்ளது. எல்லா கட்சிகளும் மற்ற கட்சிகள் மீது சகட்டுமேனிக்கு விமர்சனங்களை வீசி கவனம் ஈர்க்க ஆரம்பித்துள்ளன. திமுக மற்றும் அக்கூட்டணியில் உள்ள கட்சிகள், அதிமுக – பாஜக கூட்டணியை விளாசி வருகின்றனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இத்தனை நாள் திமுகவை மட்டும் கடுமையாக எதிர்த்து வந்த அதிமுக, இப்போது கம்யூனிஸ்டுகளையும் கசக்கி பிழிய ஆரம்பித்துள்ளது.
சில நாட்களுக்கு முன்னர் கம்யூனிஸ்டுகள் மீது பாய்ந்த இபிஎஸ், ‘திமுகவை எதிர்த்து நாங்கள் 122 ஆர்ப்பாட்டம், போராட்டங்களை நடத்தியுள்ளோம். ஆனால், திமுக அரசுக்கு எதிராக போக்குவரத்து தொழிலாளர்கள், செவிலியர்கள், விவசாயிகள், அரசு ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள் போராடுகிறார்கள். விலைவாசி உயர்வால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுபோல தமிழகத்தில் எவ்வளவோ பிரச்சினைகள் உள்ளன. அதற்கெல்லாம் கம்யூனிஸ்ட் கட்சிகள் இப்போது போராடுவதே இல்லை.
கம்யூனிஸ்ட் கட்சிகள் கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக ஆகிவிட்டன. கம்யூனிஸ்ட் கட்சிகளை திமுக கொஞ்சம் கொஞ்சமாக விழுங்கி வருகிறது. முன்பு கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் மக்களுக்காக பாடுபட்டனர். இப்போது கம்யூனிஸ்ட் தலைவர்கள் கூட்டணிக்காக கூவிக்கொண்டு இருக்கின்றனர். பாஜகவோடு அதிமுக கூட்டணி வைத்ததை முத்தரசன் விமர்சிக்கிறார். ஆனால் பாஜகவோடு கூட்டணி வைத்து பதவியை அனுபவித்த கட்சிதானே திமுக. அவர்களோடு ஏன் கூட்டணி வைத்துள்ளீர்கள்” என்று விமர்சித்தார்.
தேர்தலுக்குப் பின்னர் கம்யூனிஸ்ட் கட்சி காணாமல் போய்விடும் என்று இபிஸ் கூறியதற்கு எதிர்வினையாற்றிய மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், “தேர்தலுக்குப் பின்னர் அதிமுக, காணாமல் போகிறதா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி காணாமல் போகிறதா என்பது வெளிப்படும். பழனிசாமி முதல் நாள் ஒன்றும், மறுநாள் ஒன்றும் மாற்றி மாற்றி பேசுகிறார். முரண்பாடாக பேசுவதை பழனிசாமி வழக்கமாக வைத்துள்ளார் முதலில் அவர் ஒரு நிலைப்பாட்டுக்கு வரட்டும்.
அதிமுக கூட்டணியில் ஏராளமான விஷயங்கள் சரி செய்ய வேண்டியுள்ளது. அதிமுக, பாஜக கூட்டணியே ஒன்றுபட்ட கூட்டணியாக இல்லாமல் ஒருவர் கூட்டணி ஆட்சி என்பதும், மற்றொருவர் தனித்த ஆட்சி என்பதும் குழப்பமான சூழல் நிலவுகிறது. இதில், ஆடு நனைகிறதே என ஓநாய் அழுவதைப் போல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை பற்றி பழனிசாமி கவலைப்பட தேவையில்லை” என்றார்.
அதேபோல் பழனிசாமிக்கு பதிலடி கொடுத்துள்ள முத்தரசன், “எடப்பாடி பழனிசாமி மெகா கூட்டணி அமைக்க முயற்சி செய்து தோல்வியடைந்த விரக்தியில் இவ்வாறு பேசுகிறார்” என்றார். கம்யூனிஸ்டுகள் மீதான இபிஎஸ்சின் திடீர் பாய்ச்சலுக்கு பின்னால், முத்தரசன் சொன்ன குற்றச்சாட்டும் உள்ளது என்பது மறுக்க முடியாததுதான்.
ஏனென்றால், பாஜகவோடு கூட்டணியை முறித்துக் கொண்டு 2024 மக்களவைத் தேர்தலுக்கே மெகா கூட்டணி அமைக்கப்போவதாக சொன்னார் இபிஎஸ். ஆனால், எவ்வளவு முயற்சித்தும் கம்யூனிஸ்டுகள், விசிக போன்ற கட்சிகளை தன் பக்கம் இழுக்க முடியவில்லை. 2026 தேர்தலுக்காகவும் இக்கட்சிகளுக்கு தூண்டில் போட்டு பார்த்தார், அதுவும் பலிக்கவில்லை. இந்த ஆதங்கத்தின் வெளிப்பாடாகவே இப்போது கம்யூனிஸ்டுகளை விளாச ஆரம்பித்துள்ளார்.
தமிழகத்தில் பொதுவாக மூன்று வகை வாக்குகள் உள்ளன. ஒன்று, கட்சிகளுக்கான வாக்குகள். இந்த வாக்குகள் கிட்டத்திட்ட நிலையானது. இரண்டாவது, Issue based voters, அதாவது தங்கள் பிரச்சினைகளுக்கான கோரிக்கைகளை ஆதரிக்கும் கட்சிகளுக்கு வாக்களிப்பவர்கள். மூன்றாவது வகை என்பது பொதுமக்கள் வாக்குகள். இது பெரும்பாலும் பிம்ப கட்டமைப்பின் மூலமாகவே தீர்மானிக்கப்படுகிறது.
அப்படி பார்க்கையில், அதிமுக பலமான கட்சி, இபிஎஸ் இப்போது செல்லும் இடமெல்லாம் கூட்டம் கூடுகிறது. எனவே அக்கட்சியின் வாக்குகள் கிட்டத்திட்ட முழுமையாக அவர்களுக்கு கிடைக்கும். அதுபோல தற்போது திமுக அரசுக்கு எதிரான வாக்குகளின் கணிசமாக தனக்கு வரும் என நம்புகிறார் இபிஎஸ்.
ஆனால், பொதுவான வாக்குகள் பற்றிய பயம் இபிஎஸ்சுக்கு வந்துவிட்டது. ஏனென்றால், திமுக கூட்டணி பலமான அணி போல பொதுத் தளத்தில் பிம்பம் உருவாகியுள்ளது. அதுபோல கம்யூனிஸ்டுகள், விசிக போன்ற கட்சிகள் இருப்பதால் சமூகத்தின் விளிம்புநிலை மக்கள், சாதாரண தொழிலாளர்கள், பொதுமக்கள் வாக்குகள் திமுக பக்கம் திரள வாய்ப்புகள் உள்ளது.
எனவே, கம்யூனிஸ்டுகளை கடுமையாக விமர்சிப்பதன் மூலமாகவும், அவர்களின் நம்பகத் தன்மை, போராட்டங்கள், திமுக உறவு போன்றவற்றை கேள்விக்குள்ளாக்குவதன் மூலமாக பொதுத் தளத்தில் உருவாகும் கம்யூனிஸ்ட் – திமுக ஆதரவு பிம்பத்தை உடைத்து, தன்பக்கம் கொண்டு வர பார்க்கிறார் எடப்பாடி பழனிசாமி.
அதுபோல கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்டுகள், விசிக போன்ற கட்சிகளை பிரதானப்படுத்தி விமர்சிப்பதன் மூலம், அக்கட்சிகள் திமுகவிடம் கூடுதல் தொகுதிகள் கேட்கும். ஒருவேளை குறைவான தொகுதிகள் ஒதுக்கப்பட்டால், அதனை வைத்து கட்சிக்குள்ளேயே விமர்சனம் எழும். அது அக்கட்சி தொண்டர்களை சோர்வடைய செய்யும். இது வாக்குகள் உடைய வழி வகுக்கும் என அதிமுக நினைக்கிறது.
திமுகவை மட்டும் விமர்சித்து அதன் கூட்டணிக் கட்சிகளை புனிதப்படுத்துவது தனக்கு பாதகமாகும் என்ற முடிவுக்கு வந்துவிட்டது அதிமுக. எனவே மொத்தமாக அனைவர் மீதும் விமர்சனங்களை வீச ஆரம்பித்துள்ளார் இபிஎஸ்.
எப்படி பார்த்தாலும் இனி கம்யூனிஸ்டுகள் தன் பக்கம் வரப்போவதில்லை, அவர்களின் கட்சி வாக்குகளும் நமக்கு வராது. ஆனால், இறங்கி அடித்தால் கம்யூனிஸ்டுகள் மீது ‘சாஃப்ட் கார்னர்’ உள்ள பொதுத்தள வாக்குகள் அதிமுக பக்கம் வரும் என கணக்குப் போடுகிறார் இபிஎஸ்.
முடிந்தவரை அடிப்போம், வந்தவரை லாபம் என்ற கணக்கோடே கம்யூனிஸ்டுகள் மீது பாய ஆரம்பித்துள்ளார் இபிஎஸ். ரிசல்ட் என்ன என்று போகப் போகத் தெரியும்.