விசாகப்பட்டினம்: ஆந்திர மாநிலத்தில் வெல்டிங் கடையில் காஸ் சிலிண்டர் வெடித்ததில் கடை உரிமையாளர் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் துறைமுகம் அருகே உள்ள புக்கா வீதியில் கணேஷ் (45) என்பவர் வெல்டிங் கடை வைத்திருந்தார். இவர் மீன்பிடி படகுகளுக்கு வெல்டிங் செய்து கொடுத்து வந்தார்.
இந்நிலையில நேற்று முன்தினம் இரவு கணேஷ் மற்றும் 4 ஊழியர்கள் கடையில் வெல்டிங் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென காஸ் சிலிண்டர் வெடித்ததில் கணேஷ், ஊழியர் ஸ்ரீனு (32) ஆகிய இருவரும் அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், முத்தியாலு, எல்லாஜி, சன்னாசி ராவ், பக்கத்து கடைக்காரர் ரங்காராவ் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
இவர்கள் நால்வரும் விசாகப்பட்டினம் கேஜிஎச் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி முத்தியாலு (27) நேற்று காலையில் உயிரிழந்தார். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது. மற்ற 3 பேரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வெடிவிபத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு குறித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மிகுந்த வேதனை தெரிவித்தார். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கவும் காயம் அடைந்தவர்களுக்கு உயரிய சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டார்.