சென்னை: தமிழகத்தில் முதன்முறையாக சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் ரூ.208 கோடி மதிப்பில் 120 புதிய தாழ்தள மின்சாரப் பேருந்துகளின் சேவையை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஜூன் மாதம் தொடங்கி வைத்தார்.
பேருந்துகளை மின்னேற்றம் செய்வதற்கான கட்டுமானப் பணிகள், பராமரிப்புக் கூடம் உள்ளிட்ட வசதிகளுடன் ரூ.47.50 கோடியில் மேம்படுத்தப்பட்ட வியாசர்பாடி மின்சாரப் பேருந்து பணிமனையையும் அவர் திறந்து வைத்தார்.
இதைத் தொடர்ந்து, பெரும்பாக்கம் மின்சாரப் பேருந்து பணிமனையை பயன்பாட்டுக்குக் கொண்டுவரும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன. இதன் பகுதியாக மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் பிரபு சங்கர், அதிகாரிகளுடன் கடந்த 6-ம் தேதி பணிமனையில் ஆய்வு செய்தார்.
இதைத் தொடர்ந்து ஆக.11-ம் தேதி முதல் மின்சார ஏசி பேருந்துகள் இயக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி முதல்கட்டமாக 55 மின்சார ஏசி பேருந்துகளும், 80 மின்சாரப் பேருந்துகளும் பெரும்பாக்கம் பணிமனையிலிருந்து இயக்கப்படவுள்ளன.