அறிமுக இயக்குநர் நோவா ஆம்ஸ்ட்ராங் எழுதி இயக்கும் படம் ‘குற்றம் புதிது’. கதாநாயகனாக தருண் விஜய் நடிக்கிறார். ஷேஷ்விதா நாயகியாக நடிக்கிறார். மதுசூதன் ராவ், ராமச்சந்திரன், பாய்ஸ் ராஜன், பிரியதர்ஷினி, ஸ்ரீநிதி, சங்கீதா என பலர் நடிக்கின்றனர்.
ஜேசன் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார். கரண் பி கிருபா இசையமைக்கிறார். ஜிகேஆர் சினி ஆர்ட்ஸ் சார்பில் டாக்டர் எஸ்.கார்த்திகேயன், தருண் கார்த்திகேயன் தயாரிக்கின்றனர். இந்தப் படம் பற்றி நோவா ஆம்ஸ்ட்ராங் கூறும்போது”
“இது ‘இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர்’ படம். ஒரு சீரியல் கில்லர், அவர் செய்கிற குற்றங்கள் யாரும் யோசிக்காத வகையில் இருக்கிறது. அதை போலீஸார் எப்படிக் கண்டுபிடிக்கிறார்கள் என்று கதை செல்லும். க்ரைம் கதை என்றாலும் அப்பா – மகள் பாசம் உள்பட சில உணர்வுப்பூர்வமான விஷயங்களும் உண்டு. படத்தின் ஒவ்வொரு பதினைந்து நிமிடத்துக்கும் ஒரு ட்விஸ்ட் வரும். இது இப்படித்தான் இருக்கும் என்று பார்வையாளர்கள் யூகிக்கும்போது அது வேறொன்றாக இருக்கும்.
இதில் நடிப்பதற்காக நடிகர்களுக்கு 3 மாதம் ‘ஒர்க் ஷாப்’ நடத்தப்பட்டது. நாயகன் தருண்விஜயும் நாயகி சேஷ்விதாவும் இதில் அர்ப்பணிப்புடன் பங்கேற்றனர். இதன் கதையும் திரைக் கதையும் நிச்சயமாகப் புதுமையாக இருக்கும். படத்தின் ஒளிப்பதிவும் இசையும் பேசப்படுவதாக இருக்கும்” என்றார்.