புதுடெல்லி: “மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்குகள் திருடப்பட்டது உண்மையென உறுதிமொழி பத்திரத்தில் ராகுல் காந்தி கையெழுத்திட்டு தரவேண்டும் அல்லது மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது. டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நேற்றுமுன்தினம் பத்திரிகையாளர்களை சந்தித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசினார்.
அப்போது மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக.வுடன் தேர்தல் ஆணையம் கூட்டு சேர்ந்து வாக்குகள் திருடப்பட்டுள்ளன. மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலின் போது மாலை 5.30 மணிக்கு மேல் வாக்குப் பதிவு வழக்கத்துக்குமாறாக அதிகரித்துள்ளது.
கர்நாடகாவில் உள்ள ஒரு தொகுதியிலும் வாக்குகள் திருடப்பட்டுள்ளன’’ என்று பகிரங்கமாக குற்றம்சாட்டி அவற்றுக்கு சில ஆதாரங்களை திரையிட்டு காட்டினார். இதுதொடர்பாக கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநிலங்களைச் சேர்ந்த தலைமை தேர்தல் அதிகாரிகள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
அதில் கூறியிருப்பதாவது: வாக்குகள் திருடப்பட்டது உண்மைதான் என சட்டப்படி உறுதிமொழி பத்திரத்தில் ராகுல் காந்தி கையெழுத்திட்டு தரவேண்டும். அல்லது அபத்தமான குற்றச்சாட்டுகளை கூறிவிட்டேன் என்று இந்த நாட்டு மக்களிடம் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும். இந்த 2 வாய்ப்புகள்தான் ராகுல் காந்திக்கு உள்ளது.
மகாராஷ்டிரா, கர்நாடகா வாக்காளர் பட்டியலில் முறைகேடு, வாக்குப் பதிவில் முறைகேடு போன்றவற்றை ராகுல் காந்தி நம்பினால், உறுதிமொழிப் பத்திரத்தில் கையெழுத்திடுவதில் அவருக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. அப்படி அவர் கையெழுத்திடவில்லை என்றால், அந்த ஆய்வை அவர் நம்பவில்லை என்றுதான் பொருள். அந்த சூழ்நிலையில் அவர் மன்னிப்பு கேட்டுதான் ஆகவேண்டும்.
வாக்காளர் பட்டியலில் தவறுதலாக சேர்க்கப்பட்ட பெயர்களின் விவரங்கள், தவறுதலாக நீக்கப்பட்டவர்களின் பெயர் விவரங்கள் அடங்கிய உறுதிமொழி பத்திரத்தில் ராகுல் காந்தி கையெழுத்திட வேண்டும். அதன்பிறகு நாங்கள் சட்டப்படி தேவையான நடவடிக்கைகளை எடுப்போம்.
மேல்முறையீடு செய்யாதது ஏன்? – மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் வாக்காளர் பட்டியல் வெளிப்படையாக தயாரிக்கப்படுகிறது. அந்த பட்டியல் அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில், மகாராஷ்டிரா, கர்நாடக மாநில வாக்காளர் பட்டியலில் தவறுகள் அல்லது முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக காங்கிரஸ் கட்சி அப்போது ஏன் மேல்முறையீடு செய்யவில்லை.
அவர் அபத்தமான குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். எனவே, உறுதிமொழி பத்திரத்தில் கையெழுத்திட வேண்டும். அல்லது மன்னிப்பு கேட்க வேண்டும். மேலும், ஜோடிக்கப்பட்ட ஆதாரங்களை திரும்ப பெற வேண்டும். இவ்வாறு தலைமை தேர்தல் ஆணையர்கள் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ராகுல் காந்தி கையெழுத்திட்டு அளிக்க வேண்டிய உறுதிமொழி பத்திரத்தின் மாதிரியையும் அவருக்கு தேர்தல் ஆணையம் அனுப்பி வைத்துள்ளது.