அறிமுக நடிகர் வினோத், கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் பேய் கதை. ஜூன் மோசஸ் இயக்கியுள்ள இந்தப் படத்தில் ஆர்யலட்சுமி, கானா பல்லவ், சுகன்யா, ஆஷ் மெலோ, செல்வா, எலிசபெத் சுராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
பிரவீண் எஸ்.ஜி. ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்துக்கு போபோ சசி இசையமைத்துள்ளார். ஜெர்ரி’ஸ் ஜர்னி இன்டர்நேஷனல் சார்பில் ஜெர்ரி தயாரித்துள்ளார். ஆக.29-ம் தேதி வெளியாகும் இந்தப் படத்தை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் சுரேஷ் வழங்குகிறார். இதன் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இசையமைப்பாளர்கள் சபேஷ் முரளி சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.
ஜூன் மோசஸ் பேசும்போது, “இது ஒரு ‘ஃபேமிலி என்டர்டெய்னர்’ படம். த்ரில்லர்-காமெடி -சஸ்பென்ஸ் என ஏராளமான படங்கள் வெளியாகி இருக்கின்றன. அதில் ரத்தம், வன்முறை இருக்கும். இதில் அவை எதுவும் இருக்காது. இதன் திரைக்கதையில் புதிய முயற்சிகளைச் செய்திருக்கிறோம். கதை சொல்லும் பாணியிலிருந்தும், அதை விவரிக்கும் வகையிலும் தொழில்நுட்ப விஷயங்கள் வரை புதிதாக முயற்சித்து இருக்கிறோம்.
திரையரங்க அனுபவத்துக்காகப் பல விஷயங்களை புதிதாக செய்திருக்கிறோம். படத்தில் குழந்தைகளைக் கவர்வதற்கு விஆர் மோஷன் தொழில்நுட்பத்தை எட்டு நிமிடம் பயன்படுத்தியுள்ளோம். படம் முழுவதும் எதிர்பாராத சுவாரஸியமான திருப்பங்கள் இருக்கின்றன” என்றார். படக்குழுவினர் கலந்து கொண்டனர்.