சென்னை: பாஜகவுக்கு ஆதரவாக செயல்படுவதாக தேர்தல் ஆணையத்தைக் கண்டித்து தமிழகம் முழுவதும் ஆக.11-ம் தேதி காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
இதுதொடர்பாக கட்சியின் தமிழக தலைவர் வெளியிட்ட அறிக்கை: தேர்தல் ஆணையத்துடன் சேர்ந்து பாஜக தொடர்ந்து முறை கேடுகளை நிகழ்த்தி வெற்றி பெற்று வருவதை ராகுல்காந்தி ஆதாரங்களுடன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் ஒரே தொகுதியில் 1 லட்சம் போலி வாக்காளர்கள் சேர்ப்பை ஆதாரத்துடன் வெளியிட்டார். அதேபோல, மகாராஷ்டிராவில் நடந்த மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தல்களில் 1 கோடி போலி வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்திருப்பதாக புள்ளி விவரத்தையும் வெளியிட்டார்.
தேர்தல்களில் தொடர்ந்து பாஜக வெற்றி பெறுவதில் மிகப்பெரிய மோசடியை செய்வதற்கு தேர்தல் ஆணையம் உடந்தையாக இருக்கிறது. தேர்தல் ஆணையத்துக்கு எதிராக தலைவர் ராகுல்காந்தி கூறிய குற்றச்சாட்டுகளுக்கு தீர்வு கிடைக்கும் வரை ஜனநாயகத்தை காக்கும் போராட்டத்தில் இண்டியா கூட்டணி கட்சிகள் தொடர்ந்து குரல் கொடுக்கும்.
தேர்தல் ஆணைய முறைகேடுகளையும், பாஜகவுக்கு உடந்தையாக இருப்பதையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் காங்கிரஸ் கட்சி சார்பில் வரும் ஆக.11-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும். சென்னையில் சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில் எனது தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.