சாத்தூர்: விலைவாசியைக் கட்டுப்படுத்த தமிழக அரசு தவறிவிட்டதாக அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கூறினார்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் நேற்று மாலை பிரச்சாரம் மேற்கொண்ட பழனிசாமி, பொதுமக்களிடையே பேசியதாவது: திமுக ஆட்சியில் அரிசி, சர்க்கரை, எண்ணெய், பருப்பு என அனைத்து உணவுப் பொருட்களின் விலையும் உயர்ந்து விட்டது. விலைவாசியைக் கட்டுப்படுத்த தமிழக அரசு தவறிவிட்டது.
அதிமுக ஆட்சியில் விலைவாசி கட்டுக்குள் இருந்தது. விலை ஏறும்போது அருகில் உள்ள மாநிலங்களிலிருந்து பொருட்களை வாங்கி வந்து, குறைந்த விலையில் கொடுத்தோம்.
தமிழகத்தில் கட்டுமானப் பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. அதிமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு ஏழை மக்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டி தரப்படும். அதிமுக ஆட்சியில் அனைத்து குடும்ப அட்டைக்கும் ரூ.2 ஆயிரம் பொங்கல் தொகுப்பு பரிசு கொடுத்தோம். தற்போது ஒழுகும் வெல்லத்தை கொடுக்கின்றனர்.
இப்படிப்பட்ட ஆட்சி தேவையா? தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற 98 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளதாக கூறுகின்றனர். ஆனால், எதையும் நிறைவேற்றவில்லை. 100 நாள் வேலைத் திட்டம், 50 நாள் வேலைத் திட்டமாகி விட்டது.
சமையல் காஸ் சிலிண்டருக்கு மாதம் ரூ.100 மானியம் கொடுக்கவில்லை. பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்கவில்லை. 2 ஆயிரம் அம்மா கிளினிக்குகள் மூடப்பட்டு விட்டன. அதிமுக ஆட்சிக்கு வந்ததும் 4 ஆயிரம் இடங்களில் அம்மா கிளினிக் திறக்கப்படும்.
‘நலம் காக்கும் ஸ்டாலின்’ என்று அரசு திட்டத்துக்கு பெயர் வைத்துள்ளனர். பெயர் வைப்பதில் முதல்வருக்கு நோபல் பரிசு கொடுக்கலாம். தமிழகம் முழுவதும் 15 லட்சம் மருத்துவ முகாம்களை நடத்தி ஏழைகளுக்கு சிகிச்சை அளித்தது அதிமுக அரசு. அதிமுக கொண்டுவந்த திட்டத்துக்கு இவர்கள் பெயர் வைத்துக் கொள்கிறார்கள்.
பல ரேஷன் கடைகளில் வேட்டி, சேலை கொடுப்பதில்லை. அடுத்து அதிமுக ஆட்சி அமைந்ததும், தீபாவளிக்கு பெண்களுக்கு சேலை வழங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார். பிரச்சாரத்தின்போது, அதிமுக கிழக்கு மாவட்டச் செயலாளர் ரவிச்சந்திரன், முன்னாள் எம்எல்ஏ ராஜவர்மன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.