சென்னை: அனைத்து அரசு கலை அறிவியல் கல்லூரிகளிலும் பாலின உளவியல் விழிப்புணர்வுக் குழு ஏற்படுத்தப்படும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்தார். சென்னை நந்தனம் அரசு கலைக்கல்லூரியில் “பாலின உளவியல் குறித்த கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வுக் குழு” நேற்று தொடங்கப்பட்டது. இக்குழுவை உயர்கல்வி அமைச்சர் கோவி.செழியன், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் தொடங்கிவைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் கோவி.செழியன் பேசியதாவது: இந்தியாவிலேயே உயர்கல்வியில் தமிழகம் உயர்ந்த நிலையில் இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தமிழக முதல்வர் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார். ஆண்டுக்கு 10 லட்சம் பேருக்கு திறன் பயிற்சி அளிக்கும் இலக்குடன் தொடங்கப்பட்ட `நான் முதல்வன்’ திட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 41 லட்சம் பேருக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, முன்னெப்போதும் இல்லாத அளவில் அகில இந்திய குடிமைப்பணித் தேர்வில் வெற்றிபெறும் தமிழக மாணவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.‘புதுமைப் பெண்’ என்ற திட்டத்தின் மூலம் உயர்கல்வியில் சேர்க்கை பெறும் மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகையாக மாதம்தோறும் ரூ.1,000 வழங்கப்படுகிறது.
இதனால் உயர்கல்வியில் மாணவிகளின் சேர்க்கை உயர்ந்துள்ளது. மாணவர்களும் பயன்பெறும் நோக்கில் ‘தமிழ் புதல்வன்’ திட்டத்தையும் முதல்வர் அறிமுகப்படுத்தியுள்ளார்.
மாணவர்கள் கல்வி பயிலும் இடங்களில் உரிய புரிதலுடன் பாலின பாகுபாடின்றிச் செயல்பட ஏதுவாக “பாலின உளவியல் குறித்த கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வு குழு” உயர்கல்வி நிறுவனங்களில் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, தற்போது நந்தனம் கல்லூரியில் பாலின உளவியல் குறித்த கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வுக் குழுவின் செயல்பாடு தொடங்கப்பட்டுள்ளது. இது போன்று தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் இக்குழு அமைக்கப்படும்.
உளவியலாளர்கள், சமூகவியல் அறிஞர்கள், காவல் துறை அதிகாரிகள், பெண்ணுரிமை வல்லுநர்கள், மருத்துவர்கள் உள்ளிட்ட அனைவரின் வழிகாட்டுதலுடன் இக்குழுக்கள் மாணவ-மாணவிகளுக்கு தேவையான புரிதலையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்தும். மேலும், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இடையே உறவை வலுப்படுத்தவும் உதவும். கட்டமைக் கப்பட்ட சமுதாயத்தை உருவாக்குவதே இதன் முக்கிய நோக்கம். இவ்வாறு அவர் பேசினார்.
மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், “மாணவர்கள் பாலின விழிப்புணர்வு தொடர்பாக நடத் தப்படும் கருத்தரங்குகள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் தவறாமல் பங்கேற்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில், கல்லூரி கல்வி ஆணையர் எ.சுந்தரவல்லி, கல்லூரி முதல்வர் வே.புகழேந்தி, குழுவின் தலைவர் மு.மஜிதாபர்வின், மருத்துவர் திருமகள் மற்றும் குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.