பிரபல மலையாள நடிகை ஸ்வேதா மேனன். இவர் தமிழில், நான் அவனில்லை 2, துணை முதல்வர், சிநேகிதியே, அரவான் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இந்தியிலும் நடித்துள்ள இவர், மலையாள நடிகர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்குப் போட்டியிட விண்ணப்பித்துள்ளார். வரும் 15-ம் தேதி, இதன் தேர்தல் நடைபெற இருக்கிறது.
இந்நிலையில் பணத்துக்காக ஆபாசக் காட்சிகளில் நடித்துள்ளதாகக் கூறி, கொச்சி போலீஸார் அவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். திரைப்படங்கள் மற்றும் விளம்பரங்களில் பணத்துக்காக ஸ்வேதா மேனன் ஆபாசமாக நடித்ததாகவும் அக்காட்சிகளை சமூக ஊடகங்கள், ஆபாச தளங்களில் வெளியிட்டு வருமானம் ஈட்டியதாகவும் சமூக ஆர்வலர் மார்ட்டின் மெனச்சேரி என்பவர், எர்ணாகுளம் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இதற்கு ஆதாரமாக, ஸ்வேதா நடித்த விளம்பரப் படம் மற்றும் ரதிநிர்வேதம், பலேரிமாணிக்கம், களிமண்ணு போன்ற படங்களில் நடித்துள்ள காட்சிகளைக் குறிப்பிட்டுள்ளார். நீதிமன்ற உத்தரவுப்படி கொச்சி போலீஸார் ஸ்வேதா மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதையடுத்து, தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று ஸ்வேதா மேனன் கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
மலையாள நடிகர் சங்கத் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் நிலையில் தவறான நோக்கத்தில் புகார் அளிக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்யப் பட்டுள்ளதாக அதில் தெரிவித்திருந்தார்.
விசாரித்த கேரள உயர் நீதிமன்ற நீதிபதி வி.ஜி.அருண், ஸ்வேதா மேனனுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார்.