திருவாரூர்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை பற்றி, அதிமுக பழனிசாமி கவலைப்படத் தேவையில்லையென, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிடியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் கருத்து தெரிவித்துள்ளார்.
பிஹார் மாநில தேர்தல் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலிலிருந்து 65 லட்சம் வாக்காளர்களை நீக்கம் செய்துள்ளதை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிசார்பில் கண்டன் ஆர்ப்பாட்டம் இன்று திருவாரூரில் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அக்கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பிஹார் மாநிலத்தில் வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ளது. அதற்காக வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில், 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களைத் தேடிச்சென்ற போது வீட்டில் இல்லை என்ற காரணத்தினால் அந்த வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
பிஹாரைச் சேர்ந்த தொழிலாளர்கள் புலம்பெயர்ந்து பிழைப்பு தேடி தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு வந்திருக்கின்றபோது , சிலமாதம் வெளியூரில் சென்று தங்கி வேலை பார்த்தவர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக பாஜகவுக்கு வாக்களிக்க மாட்டார்கள் என கருதப்பட்ட வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது ஒரு மோசமான நடவடிக்கை. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
நேற்றைய தினம் ராகுல் காந்தி, கடந்த மக்களவைத் தேர்தலில் வாக்காளர் பட்டியலில் செய்துள்ள குளறுபடியை, மோசடியை ஆதாரத்துடன் அம்பலப்படுத்தி உள்ளார். அம்பானியாக இருந்தாலும், அன்றாடம் காட்சியாக இருந்தாலும் வாக்குரிமை என்பது சமமான ஒன்று. சமமான இந்த மதிப்பை ஏற்கும் கூட்டமாக ஆர்எஸ்எஸ், பாஜகவினர் இல்லை.
பிஹார் மாநிலத்தில் நடந்துள்ளதற்கு ஏன் ஆர்ப்பாட்டம் நடத்துகிறீர்கள் என்று பலர் கேட்கிறார்கள். அடுத்து மேற்குவங்கம், அசாம்,தமிழ்நாடு,கேரளா உட்பட மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தச் சூழலில் சோதனை முயற்சியாக பிஹாரில் இத்தகைய மோசடியில் ஈடுபட்டுள்ளனர். அடுத்தடுத்து அனைத்து மாநிலங்களிலும் இப்படி வருகின்றபோது ஏற்கனவே வாக்காளர்களாக இருக்கின்றவர்களின் வாக்குரிமை பறிக்கப்படும்.
வாக்காளர்களே இல்லாமல் செய்வதன் மூலமாக, ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவது என்ற புதிய தந்திரத்தை பாஜக நடைமுறைப்படுத்திக் கொண்டுவருகிறது. தேர்தல் ஆணையம் தன்னாட்சி அதிகாரம் பெற்ற அமைப்பு என்பதற்கு பதிலாக மத்திய பாஜக அரசினுடைய கைப்பாவையாக மாறி வருகிறது. அதன் விளைவாக பாஜக என்ன சொல்லுகிறதோ அதனை நடைமுறைப்படுத்தக் கூடிய அமைப்பாக தேர்தல் ஆணையம் மாறிவிட்டது. தேர்தல் ஆணையர்களே ஆளுங்கட்சிக்கு ஆதரவானவர்களாக இருக்கிறார்கள் அப்படிப்பட்டவர்களை தான் நியமனம் செய்கிறார்கள்.
கள்ள ஓட்டு போடுவது, வாக்காளர் பட்டியலில் மோசடி என்பதை தாண்டி, தேர்தல் ஆணையமே மோசடியான தேர்தல் ஆணையம் என்கின்ற அளவுக்கு நிலைமை மாறி உள்ளது. எனவே, இந்திய நாட்டு மக்களுக்கு இருக்கக்கூடிய வாக்களிக்கின்ற உரிமை, வாக்காளராக சேர்கின்ற உரிமை, ஜனநாயக உரிமையை பாதுகாக்க இந்தியாவில் உள்ள அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைந்து கண்டனக் குரலை எழுப்ப வேண்டும். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி இந்திய நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கான இடங்களில் எங்களது கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. தமிழ்நாட்டில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு வருகிறது என்றார்.
தொடர்ந்து, தேர்தலுக்குப் பின்னர் கம்யூனிஸ்ட் கட்சி காணாமல் போய்விடும் என்று கூறியது தொடர்பாக செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த பெ.சண்முகம், “தேர்தலுக்குப் பின்னர் அதிமுக, காணாமல் போகிறதா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி காணாமல் போகிறதா என்பதை வெளிப்படும். பழனிசாமி முதல் நாள் ஒன்றும், மறுநாள் ஒன்றும் மாற்றி,மாற்றி பேசுகிறார். முரண்பாடாக பேசுவதை பழனிசாமி வழக்கமாக வைத்துள்ளார் முதலில் அவர் ஒரு நிலைப்பாட்டுக்கு வரட்டும். அந்த கூட்டணியில் ஏராளமான விஷயங்கள் சரி செய்ய வேண்டியுள்ளது.
அதிமுக, பாஜக கூட்டணியே ஒன்றுபட்ட கூட்டணியாக இல்லாமல் ஒருவர் கூட்டணி ஆட்சி என்பதும், மற்றொருவர் தனித்த ஆட்சி என்பதும் குழப்பமான சூழல் நிலவுகிறது. இதில், ஆடு நனைகிறதே என ஓநாய் அழுவதைப் போல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை பற்றி பழனிசாமி கவலைப்பட தேவையில்லை என்றார்.