புதுடெல்லி: அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி பிரசாந்த் குமார் தனது மீதமுள்ள பதவிக்காலத்தில் எந்தவொரு குற்றவியல் வழக்குகளையும் விசாரிப்பதைத் தடைசெய்து ஆகஸ்ட் 4 ஆம் தேதி பிறப்பித்த உத்தரவை உச்ச நீதிமன்றம் இன்று திரும்பப் பெற்றது.
அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி பிரசாந்த் குமார் மீது பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை மறுபரிசீலனை செய்யக் கோரி இந்திய தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் எழுதிய கடிதத்தின் அடிப்படையில் செயல்படுவதாக நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா மற்றும் ஆரமகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு தெரிவித்துள்ளது.
அவர்கள் இன்று பிறப்பித்த உத்தரவில், “ஆகஸ்ட் 4 ஆம் தேதி உத்தரவின் பத்திகள் 25 மற்றும் 26 இல் நாங்கள் பிறப்பித்த உத்தரவுகளை மறுபரிசீலனை செய்யுமாறு கோரி, தலைமை நீதிபதியிடமிருந்து எங்களுக்கு கடிதம் வந்தது. தலைமை நீதிபதி கோரிக்கை விடுத்துள்ளதால், பத்திகள் 25 மற்றும் 26 ஐ நீக்குகிறோம்.” என்று தெரிவித்துள்ளது.
இந்த இரண்டு பத்திகளிலும், அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி பிரசாந்த் குமார் தனது நீதித்துறை வாழ்க்கையின் எஞ்சிய காலத்திற்கு எந்தவொரு குற்றவியல் வழக்குகளையும் விசாரிப்பதை தடை செய்யும் உத்தரவை அமர்வு பிறப்பித்தது. மேலும், 2029 ஆண்டு தனது பதவி காலம் முடியும் வரை ஒரு டிவிஷன் பெஞ்சில் அனுபவம் வாய்ந்த மூத்த நீதிபதியுடன் இணைந்து அவர் செயல்படவேண்டும் என்றும் அமர்வு அறிவுறுத்தியது.
இன்று உச்ச நீதிமன்ற அமர்வு பிறப்பித்த உத்தரவில், “அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி மீது அவமானத்தை ஏற்படுத்தவோ அல்லது அவதூறு பரப்பவோ ஒருபோதும் விரும்பவில்லை. இருப்பினும் ஒரு உயர் நீதிமன்ற நீதிபதியின் உத்தரவு சட்டப்படி நியாயமற்றதாகவும், வெளிப்படையாகத் தவறாகவும் இருக்கும்போது, நீதித்துறையின் கண்ணியம் மற்றும் நம்பகத்தன்மை மக்களின் மனதில் உயர்ந்ததாக இருப்பதை உறுதிசெய்ய, அதில் தலையிடுவது இந்த நீதிமன்றத்தின் அரசியலமைப்பு கடமையாகிறது.
எதிர்காலத்தில் எந்த உயர் நீதிமன்றத்திலிருந்தும் இதுபோன்ற நியாயமற்ற உத்தரவுகளை நாங்கள் சந்திக்க மாட்டோம் என்று நம்புகிறோம். சட்டத்தின் ஆட்சி மற்றும் நிறுவன நம்பகத்தன்மை பராமரிக்கப்படாவிட்டால், அது சட்டத்தின் ஆட்சியின் முடிவாகும். அனைத்து மட்டங்களிலும் உள்ள நீதிபதிகள் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்த வேண்டும். ஆகஸ்ட் 4 ஆம் தேதி வெளியிடப்பட்ட நாங்கள் கருத்துக்கள் நீதித்துறை மீதான பொதுமக்களின் நம்பிக்கையை வலுப்படுத்தும் நோக்கில் அமைந்தவை . 90% பேருக்கு உயர் நீதிமன்றங்கள் இறுதி நீதிமன்றமாகவே இருக்கின்றன. எனவே இந்த நீதிமன்றங்கள் சட்டத்தின்படி செயல்பட வேண்டும். அபத்தமான மற்றும் நியாயமற்ற உத்தரவுகளை பிறப்பிக்கக்கூடாது” என்று தெரிவித்தது.
ரூ.7.23 லட்சம் பணப் பரிவர்த்தனை தகராறு தொடர்பான மேல்முறையீட்டில், அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி பிரசாந்த் குமார், புகார்தாரர் ஒரு சிறு தொழிலதிபர் என்பதால், அவரால் நீண்ட சிவில் விசாரணையை நடத்த முடியாது என்று கூறி, இவ்வழக்கில் குற்றவியல் நடவடிக்கைகளைத் தொடர அனுமதித்தார். இந்த தீர்ப்பு சர்ச்சையாகி உச்ச நீதிமன்றத்துக்கு வந்தது. இது முற்றிலும் சிவில் வழக்கு என்பதை கண்டறிந்த உச்ச நீதிமன்றம், நீதிபதி பிரசாந்த் குமாரின் தீர்ப்பு அபத்தமானது மற்றும் மிக மோசமான உத்தரவுகளில் ஒன்று என்றும் கூறியது. மேலும் அவருக்கு எதிராக கடுமையான உத்தரவுகளையும் பிறப்பித்தது.