காரைக்குடி திமுக மேயர் முத்துதுரைக்கு எதிராக திமுக துணை மேயர் குணசேகரன் கிளப்பிய ‘நம்பிக்கை இல்லா தீர்மான புயல்’ நடு வழியில் நின்று போனதால் குணசேகரனை நம்பி களமிறங்கிய அதிமுக அசிங்கப்பட்டுப் போனது.
ஆளும்கட்சி கவுன்சிலர்களையே மதிப்பதில்லை, வார்டுகளில் வேலை நடக்கவில்லை என்றெல்லாம் சொல்லி ஜூலை 10-ல் மேயர் முத்துதுரைக்கு எதிராக அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினரை ஒன்று திரட்டி நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர ஆணையரிடம் கடிதம் கொடுத்தார் துணை மேயர் குணசேகரன்.
அப்போது, மேயரை விட்டேனா பார் என விண்ணுக்கும் மண்ணுக்கும் குதித்தார் குணசேகரன். இதனிடையே, மேயரைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய அதிமுக, நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடக் கோரி நீதிமன்றக் கதவுகளை தட்டியது. இதையடுத்து, ஆகஸ்ட் 7-ம் தேதி தீர்மானத்தின் மீது ரகசிய வாக்கெடுப்பு நடத்த ஆணையிட்டது நீதிமன்றம்.
இதையடுத்து குஷி மோடுக்கு மாறிய அதிமுக கவுன்சிலர்கள், துணை மேயர் ஆதரவுடன் மேயரை வீட்டுக்கு அனுப்பி திமுக-வை அசிங்கப்படுத்திவிடலாம் என மனக்கோட்டைகட்டினர். ஆனால் நேற்று நடைபெற்ற மேயருக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு தொடர்பான கூட்டத்தில், துணை மேயர் உள்ளிட்ட திமுக கவுன்சிலர்கள் மட்டுமல்லாது திமுக கூட்டணி கட்சி கவுன்சிலர்களும் கலந்து கொள்ளவில்லை.
துணை மேயரை நம்பி படை திரட்டிய அதிமுக கவுன்சிலர்கள் 7 பேரும் சுயேச்சை ஒருவரும் மட்டுமே கூட்டத்திற்கு வந்திருந்தனர். இதையடுத்து, கோரம் இல்லாததால் நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வியடைந்தது எனச் சொல்லி கூட்டத்தை முடித்தார் ஆணையர். நம்பிக்கை இல்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்புக் கூட்டத்தை தள்ளி வைக்க வேண்டும் என்ற அதிமுக-வினரின் கோரிக்கையை ஆணையர் காதில் வாங்கிக்கொள்ளவே இல்லை.
இதுகுறித்து நம்மிடம் பேசிய அதிமுக கவுன்சிலர்கள், “என்னுடைய மாநகரச் செயலாளர் பதவியே போனாலும் மேயருக்கு எதிராக கடைசி வரை நிற்பேன் என்று சொன்னார் குணசேகரன். அவரது ஆதரவில் தான் மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து நம்பிக்கையில்லா தீர்மான கூட்டத்துக்கு அனுமதி பெற்றோம்.
ஆனால் கடைசி நேரத்தில், அவரும் இப்படி விலைபோய்விட்டார். இன்றைய கூட்டத்தில் கலந்துகொள்ளக் கூடாது என்பதற்காக துணை மேயர் உள்ளிட்ட மேயரை எதிர்த்து நின்ற திமுக கவுன்சிலர்களை திண்டுக்கல் மாவட்டம் சிறுமலையில் கொண்டு போய் பதுக்கிவிட்டார்கள். இதனால் துணை மேயரை நம்பி வந்த நாங்கள் அசிங்கப்பட்டு நிற்கிறோம்” என்றனர்.
திமுக-வினரோ, “மேயருக்கு எதிராக துணை மேயரே நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவதை அதிமுக தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ள நினைத்தது. இதையடுத்து, தலைமை நெருக்கியதால் மாவட்டச் செயலாளரும் அமைச்சருமான கே.ஆர்.பெரியகருப்பன், துணை மேயரையும் அவருக்கு ஆதரவாக நின்ற திமுக கவுன்சிலர்களையும் அழைத்து, ‘பேசவேண்டிய’ விதத்தில் பேசி துணை மேயரை பின்வாங்க வைத்துவிட்டார்.
இதையடுத்து மேயர் தரப்பும், குணசேகரன் உள்ளிட்டவர்களை இன்பச் சுற்றுலா அழைத்துச் சென்று கூல்படுத்திவிட்டது. அந்த ஆதங்கத்தில், ‘துணை மேயரையும் அவரது ஆதரவு கவுன்சிலர்களையும் கடத்திவிட்டார்கள். துணை மேயர் உயிரோடு இருக்கிறாரா என்பதே சந்தேகமாக இருக்கிறது’ என்றெல்லாம் வதந்திகளைப் பரப்பியது அதிமுக” என்றனர்.
துணை மேயர் குணசேகரனை நாம் தொடர்பு கொண்டபோது, “நான் எங்கும் செல்லவில்லை; வீட்டில் தான் இருக்கிறேன். அதிமுக கவுன்சிலர் வழக்குப் போட்டு கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பில் நான் எப்படி கலந்துகொள்ள முடியும்?” என்று ‘அறிவுபூர்வமாக’ கேள்வி எழுப்பினார்.
மேயர் முத்துதுரையை தொடர்பு கொண்டபோது, வழக்கம்போல் அவர் நமது அழைப்பை ஏற்கவில்லை.இப்போதைக்கு இந்த விவகாரம் அடங்கி இருந்தாலும் கூடிய சீக்கிரமே வேறொரு ரூட்டில் இது வில்லங்கமாக வெடிக்கும் என்கிறார்கள் உள்விவகாரங்களை அறிந்தவர்கள்!