பாட்னா: பிஹாரில் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு வாக்காளர் அட்டையை சரிபார்ப்பதற்கு இருப்பிட சான்றிதழ் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, மாநிலம் முழுவதும் இணைய வழியில் இருப்பிட சான்றிதழ் கோரி விண்ணப்பித்து வருகின்றனர். அந்த வகையில், பாட்னாவில் பாபு என்ற பெயரில் ஒரு நாய் புகைப்படத்துடன் இருப்பிட சான்றிதழ் வழங்கப்பட்டது.
பின்னர், அந்த சான்றிதழ் ரத்து செய்யப்பட்டது. மேலும், விண்ணப்பித்தவர், சான்றிதழ் வழங்கிய அதிகாரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த சூழ்நிலையில், சமஸ்திபூர் மாவட்டத்தில் டொனால்டு ஜான் ட்ரம்ப் என்பவர் இருப்பிடச் சான்றிதழ் கோரி விண்ணப்பித்திருந்தார். ஜூலை 29-ம் தேதியிட்ட அந்த விண்ணப்பத்தில் தந்தை பெயர் பிரடெரிக் கிறிஸ்ட் ட்ரம்ப் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
அத்துடன் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் புகைப்படம் மற்றும் போலி ஆதார் கார்டு ஆகியவை பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. இந்த விண்ணப்பத்தை மொஹியுதீன் நகர் வருவாய் அதிகாரி பரிசீலித்து கடந்த 4-ம் தேதி நிராகரித்தார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மாநில அரசின் டிஜிட்டல் நிர்வாக நடைமுறையை கேள்விக்குரியதாக ஆக்கவும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியை தவறாக வழிநடத்தவும் சிலர் முயற்சிப்பதாக மாவட்ட நிர்வாகம் குற்றம்சாட்டி உள்ளது.