புதுடெல்லி: “மகாராஷ்டிர தேர்தலில் வாக்குகளை திருடுவதற்கு பாஜக.வுடன் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்துள்ளது” என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து ராகுல் காந்தி நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: மகாராஷ்டிர தேர்தலில் வாக்காளர் பட்டியலை அளிக்க தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது. மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலின் போது மாலை 5.30 மணிக்கு மேல் வாக்குப் பதிவு வழக்கத்துக்கு மாறாக அதிகரித்துள்ளது. இவை எல்லாம் பெரும் சந்தேகத்தையும் தேர்தல் ஆணைய நடைமுறையின் நம்பகத்தன்மையும் கேள்விக் குறியாக்குகின்றன.
மகாராஷ்டிராவில் சட்டப்பேரவைத் தேர்தலில் எங்கள் கூட்டணி தோல்வி அடைந்தது. அதேநேரத்தில் மக்களவைத் தேர்தலில் மகாராஷ்டிராவில் எங்கள் கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இதுவும் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இந்த 2 தேர்தலுக்கும் இடைப்பட்ட காலத்தில் ஒரு கோடிக்கும் அதிகமாக புதிய வாக்காளர்கள் சேர்ந்துள்ளனர். இதுகுறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவித்தோம்.
மகாராஷ்டிராவில் உள்ள 48 மக்களவை தொகுதியில் இண்டியா கூட்டணி கட்சிகள் 30 இடங்களை கைப்பற்றின. ஆனால், சட்டப்பேரவைத் தேர்தலில் 50 இடங்களை கூட இண்டியா கூட்டணியால் பிடிக்க முடியவில்லை. இது பெரும் சந்தேகத்தை எழுப்புகிறது. இதேபோல் கர்நாடக தேர்தலிலும் முறைகேடுகள் நடைபெற்றுள்ளது விசாரணையில் தெரிய வருகிறது.
மகாராஷ்டிர தேர்தலில் வாக்காளர் பட்டியலை வெளியிடுவதில் தேர்தல் ஆணையத்துக்கு என்ன பிரச்சினை? வாக்காளர் பட்டியல் என்பது இந்த நாட்டின் சொத்து. அதை வழங்க தேர்தல் ஆணையம் மறுக்கிறது. மேலும், மகாராஷ்டிராவில் வாக்குப் பதிவு நடைபெற்ற தினத்தில் சிசிடிவி கேமரா பதிவுகளை அழிக்க தேர்தல் ஆணையம் முயற்சித்தது.
இது மிகப் பெரிய சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. தேர்தல் தினத்தன்று வாக்குச் சாவடிகளில் மாலை 5.30 மணிக்கு மேல் கூட்டம் இல்லை என்று காங்கிரஸ் நிர்வாகிகள் கூறுகின்றனர். மாலை 5.30 மணிக்கு மேல் அளவுக்கதிகமாக வாக்குப் பதிவு நடைபெறவில்லை என்று உறுதியாக கூறுகின்றனர். இந்த 2 விஷயங்களும் பாஜக.வுடன் தேர்தல் ஆணையம் இணைந்து மகாராஷ்டிர தேர்தலில் வாக்குகளை திருடிவிட்டன என்ற சந்தேகம் எழுகிறது. இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.