ராஜபாளையம்: அதிமுகவின் கொள்கை வேறு, கூட்டணி வேறு என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி கூறினார். ‘மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற பயணத்தை மேற்கொண்டுள்ள பழனிசாமி நேற்று ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
ராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் அருகே பொதுமக்களிடையே அவர் பேசியதாவது: முதல்வர் ஸ்டாலின் தங்களது கூட்டணி வலுவானது என்று கூறிவருகிறார்.
அவர்களுக்கு கூட்டணி வலிமை என்றால், எங்களுக்கு மக்கள்தான் வலிமை. திமுகவை எதிர்த்து சட்டப்பேரவையிலும், மக்கள் மன்றத்திலும் கம்யூனிஸ்ட் கட்சிகள் பேசுவதில்லை. எங்களுக்கு கொள்கை இல்லை என்கிறார் இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன்.
அவர்களுக்கு கொள்கை இல்லாததால்தான், மக்கள் செல்வாக்கை இழந்துவிட்டார்கள். அதிமுகவுக்கு கொள்கை வேறு, கூட்டணி வேறு. மத்திய ஆட்சியை அகற்ற வேண்டுமென இண்டியா கூட்டணியை அமைத்துள்ளனர். அவர்களுக்கு என்ன ஒரே கொள்கையா இருக்கிறது. திமுக கூட்டணிக்கு ஒரே கொள்கை என்றால், அனைத்து கட்சிகளையும் திமுகவில் இணைத்து கொள்ளலாமே? திமுக ஆட்சிக்கு வந்தால், தூய்மைப் பணியாளர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்போம் என்றார்.
தற்போது 6 நாட்களாக தூய்மைப் பணியாளர்கள் போராடி வருகின்றனர். அவர்களை யாரும் கண்டுகொள்ளவில்லை. அரசு ஊழியர்கள், செவிலியர்கள், போக்குவரத்து ஊழியர்கள், விவசாயிகள் என யாருடைய போராட்டத்துக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகள் குரல் கொடுக்கவில்லை. திமுகவின் தவறுகளை கம்யூனிஸ்ட் கட்சிகள் சுமக்கக் கூடாது.
தமிழக அரசில் காலியாக உள்ள 5.5 லட்சம் பணியிடங்கள் நிரப்படும் என தேர்தல் அறிக்கையில் திமுக உறுதியளித்தது. ஆனால், சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் ஸ்டாலின், 50 ஆயிரம் அரசு ஊழியர்கள் நியமிக்கப்பட்டதாக கூறுகிறார். கடந்த 4 ஆண்டுகளில் 75 ஆயிரம் பேர் ஓய்வு பெற்ற நிலையில், தற்போது காலி பணியிடங்களின் எண்ணிக்கை 5.75 லட்சமாக உயர்ந்துள்ளது.
அதிமுக ஆட்சி அமைந்தால் தீபாவளிக்கு பெண்களுக்கு சேலை வழங்கப்படும். ஏழைகளுக்கு கான்கிரீட் வீடு கட்டித்தரப்படும். வரும் தேர்தலில் அதிமுக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். இவ்வாறு அவர் பேசினார். முன்னாள் அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி, ஆர்.பி.உதயகுமார், காமராஜ் உடனிருந்தனர்.