லண்டன்: இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் சமீபத்தில் முடிவடைந்தது. லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற கடைசி டெஸ்ட்டில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 2-2 என சமன் செய்தது.
இந்த தொடரில் மான்செஸ்டரில் நடைபெற்ற 4-வது டெஸ்ட் போட்டியின்போது, இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பந்த்துக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளரான கிறிஸ் வோக்ஸ் வீசிய பந்தை அடிக்க முயன்ற போது ரிஷப் பந்த்துக்கு இந்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து, அவர் லண்டனில் நடைபெற்ற கடைசி டெஸ்ட் போட்டியிலிருந்து விலகினார்.
இது ஒருபுறம் இருக்க 5-வது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் பீல்டிங்கின் போது கிறிஸ்வோக்ஸ் தோள்பட்டையில் காயம் அடைந்தார். இதனால் அவர், முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்யவில்லை. ஆனால் 2-வது இன்னிங்ஸில் அணியின் வெற்றிக்காக இடது கை முழுவதும் கட்டப்பட்ட நிலையில் ஒற்றை கையுடன் பேட்டிங் செய்வதற்காக கிறிஸ்வோக்ஸ் களமிறங்கினார். தன்னால் பேட்டிங் செய்ய முடியாத நிலையில் சுமார் 2 ஓவர்கள் களத்தில் நின்று மறுமுனையில் பேட் செய்த கஸ் அட்கின்சனுக்கு ஒத்துழைப்பு கொடுத்தார். அவரது இந்த போராட்ட குணத்தை அனைவரும் பாராட்டினர்.
இந்நிலையில் கிறிஸ்வோக்ஸ் கூறும்போது, “இன்ஸ்டாகிராமில் என்னுடைய புகைப்படத்தை சல்யூட் எமோஜியுடன் ரிஷப் பந்த் பகிர்ந்துள்ளார். அதனால், அவருக்கு நான் நன்றி கூறினேன். அவரது அன்புக்கு என்னுடைய நன்றியை தெரிவித்தேன். அவரது கால் தற்போது நன்றாக இருக்கும் என நம்புகிறேன். என்னுடைய பந்துவீச்சில் அவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதால், அவரிடம் மன்னிப்பு கேட்டேன். காயத்துடன் ஓவல் டெஸ்ட்டில் நான் களமிறங்கியதை இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் பாராட்டினார். உங்களது தைரியம் நம்பமுடியாத விதமாக இருக்கிறது எனக் கூறினார். அப்போது நான், இந்த தொடரில் நீங்கள் சிறப்பாக விளையாடினீர்கள். உங்களது அணி சிறப்பாக செயல்பட்டது என கூறினேன்’‘ என்றார்.