மான்ட்ரியல்: கனடாவின் மான்ட்ரியல் நகரில் கனடியன் ஓபன் சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஒற்றையர் பிரிவு அரை இறுதியில் 49-ம் நிலை வீராங்கனையான நவோமி ஒசாகா, போட்டித் தரவரிசையில் 19-வது இடத்தில் உள்ள டென்மார்க்கின் கிளாரா டவுசனை எதிர்த்து விளையாடினார். இதில் நவோமி ஒசாகா 6-2, 7-6 (9-7) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
4 கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள் வென்றுள்ள நவோமி ஒசாகா இறுதிப் போட்டியில், 85-ம் நிலை வீராங்கனையான கனடாவின் விக்டோரியா எம்போகோவு
டன் பலப்பரீட்சை நடத்துகிறார். 18 வயதான விக்டோரியா எம்போகோ அரை இறுதி சுற்றில் 9-ம் நிலை வீராங்கனையான கஜகஸ்தானின் எலெனா ரைபகினாவை 1-6, 7-5, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.
ஒரு வருடத்துக்கும் மேலாக மகப்பேறு விடுப்பில் இருந்து 2024-ல் களத்துக்கு திரும்பிய உலகின் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான நவோமி ஒசாகா தொடர்ச்சியாக உயர்மட்ட செயல் திறனை வெளிப்படுத்த கடுமையாக போராடி வருகிறார். அவரது போராட்டத்துக்கு கனடியன் ஓபன் தொடர் பலன் கொடுத்துள்ளது.
கச்சனோவ் அசத்தல்: கனடாவின் டொராண்டோ நகரில் டொராண்டோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் ஒற்றையர் அரை இறுதி சுற்றில் போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள ஜெர்மனியின் அலெக்ஸாண்டர் ஜிவேரேவ், 11-ம் நிலை வீரரான ரஷ்யாவின் கரேன் கச்சனோவை எதிர்த்து விளையாடினார். இதில் கரேன் கச்சனோவ் 6-3, 4-6, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் ஜிவேரேவை தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
மற்றொரு அரை இறுதியில் போட்டித் தரவரிசையில் 2-ம் நிலை வீரரான அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ், சகநாட்டைச் சேர்ந்த 4-ம் நிலை வீரரான பென் ஷெல்டனுடன் மோதினார். அதில் பென் ஷெல்டன் 6-4, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். கோப்பையை வெல்வதற்கான இறுதி ஆட்டத்தில் கரேன் கச்சனோவ் – பென் ஷெல்டன் பலப்பரீட்சை நடத்த உள்ளனர்.