சென்னை: கலைஞர் பல்கலைக்கழகம் அமைக்க சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு ஒப்புதல் அளிக்காமல் 3 மாதங்களுக்கு மேல் நிலுவையில் வைத்திருந்த ஆளுநர் ஆர்.என்.ரவி மீது தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழக சட்டப்பேரவையில் கடந்த ஏப்.28-ம் தேதி கும்பகோணத்தில் கலைஞர் கருணாநிதி பெயரில் கலைஞர் பல்கலைக் கழகம் அமைக்கப்படும் என்ற சட்ட முன்வடிவு நிறை வேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது.
இந்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு 3 மாதங்களுக்கு மேலாகியும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்காமல் தற்போது குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவைத்திருப்பது உச்ச நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் நடவடிக்கையாகும். மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வலியுறுத்த ஆளுநரை சந்திக்க நேரம் கேட்டாலும் அனுமதி கிடைக்கவில்லை.
எனவே, மசோதா மீது முடிவெடுக்க ஆளுநர்கள் மற்றும் குடியரசுத் தலைவருக்கு உச்சநீதிமன்றம் 3 மாதங்கள் மட்டுமே காலக்கெடுவிதித்திருந்தது. இந்த கால தாமதம் மீறப்பட்டதால் தற்போது தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.