மதுரை: எப்எல்-2 உரிமம் பெற்று நடத்தப்படும் மனமகிழ் மன்றங்களில் சட்டவிரோதமாக மது விற்பனை தொடர்பாக நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருச்சி கருமண்டபத்தை சேர்ந்த ஸ்ரீனிவாசன், உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: திருச்சி பிரதான சாலைகளில் மனமகிழ் மன்றங்கள் என்ற பெயரில் எப்எல்-2 உரிமம் பெற்ற மதுபான கூடங்கள் செயல்பட்டு வருகின்றன. தமிழகம் முழுவதும் 300 மனமகிழ் மன்றங்கள் உள்ள நிலையில் திருச்சியில் மட்டும் 13 மனமகிழ் மன்றங்கள் உள்ளன. மதுவிலக்கு துறை தகவல் படி பார்த்தால் தமிழகத்தில் 125 எப்எல்-2 உரிமம் பெற்ற மதுபான கூடங்கள் செயல்படுகிறது.
ஆனால் உண்மையில் அதை விட கூடுதல் எண்ணிக்கையில் எப்எல்- 2 உரிமம் பெற்ற மதுபான கூடங்கள் செயல்படுகின்றன. இதனால் சட்டவிரோதமாக இயங்கி வரும் எப்எல்-2 மதுபான கூடங்கள் தொடர்பாக ஆய்வு செய்ய வேண்டியது அவசியம். இந்த மதுபான கூடங்கள் எப்எப்-2 உரிமம் பெற்ற மதுபான கூடங்கள் காலை 11 மணி முதல் இரவு 11 மணி வரை இயங்க அனுமதி உண்டு. ஆனால் பெரும்பாலான மதுபான கூடங்கள் அதிகாலை 3 மணி வரை செயல்படுகிறது.
மதுபான கூடங்களில் ஏராளமான சட்டவிரோத நடவடிக்கைளும் நடைபெறதாக புகார்கள் வருகின்றன. இருப்பினும் போலீஸார் மதுபான கூடம் நடத்துவோரிடம் லஞ்சம் பெற்றுக்கொண்டு நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர. இதனால் தமிழகத்தில் எப்எல்-2 உரிமம் பெற்ற மதுபான கூடங்களில் உறுப்பினர்கள் அல்லாதவர்களுக்கு விற்பனை செய்வதை முறைப்படுத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியன், ஏ.டி.மரிய கிளாட் விசாரித்தனர். பின்னர் நீதிபதிகள், சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவது குற்றம். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் ஒவ்வொரு முறையும் நீதிமன்றம் தலையிட்டு உத்தரவு பிறப்பிக்க முடியாது என்றனர். மனுதாரர் தரப்பில், மது விற்பனைக்கு ரசீது வழங்குவதில்லை. சட்டவிரோத மது விற்பனை தொடர்பாக அதிகாரிகளிடம் புகார் அளித்தாலும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.
பின்னர் நீதிபதிகள், சட்டவிரோதமாக மது விற்பனை யாருக்கு செய்யப்பட்டாலும் அது குற்றமே. அது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டிய மதுவிலக்கு துறையின் உதவி ஆணையர் நடவடிக்கை எடுப்பதில்லை என மனுதாரர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
எனவே, திருச்சி மாவட்டத்தில் எப்எல்-2 உரிமம் பெற்ற மதுபான கூடங்களில் சட்டவிரோத மதுபானம் விற்பனை செய்வது தொடர்பான புகார்கள் தொடர்பாக திருச்சி மாவட்ட மதுவிலக்கு உதவி ஆணையர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மனு முடிக்கப்படுகிறது என உத்தரவிட்டனர்.