திண்டிவனம்: “தண்ணீருக்குப் பதிலாக வியர்வையை ஊற்றி, பாமக எனும் ஆலமரத்தை உருவாக்கினேன். அந்த ஆலமரத்தில் இருந்து ஒரு கிளையை வெட்டி கோடரி செய்து, அந்தக் கோடரியால் மரத்தையே வெட்ட முயற்சிக்கிறார் அன்புமணி” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வேதனை தெரிவித்துள்ளார்.
திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் செய்தியாளர்களிடம் ராமதாஸ் இன்று கூறியது: “தைலாபுரம் வரும் அன்புமணி, தாயை மட்டும் பார்த்துவிட்டு, என்னிடம் பேசாமல் செல்கிறார். மாற்று கட்சியில் இருந்து வந்த வழக்கறிஞர் ஒருவர் என்னை ‘ராமதாஸ்’ என்று அழைக்கிறார். ‘அய்யா’ என்று சொன்னவர்களை ‘ராமதாஸ்’ என்று சொல்ல வைத்தது அன்புமணிதான்.
வஞ்சனை, சூது ஆகியவை மூலம் பாமகவை கைப்பற்றி, ‘நான்தான் இனி பாமக’ என்று சொல்லத் துடிக்கிறார் அன்புமணி. அவரது தலைவர் பதவி மே மாதத்துடன் காலாவதியாகிவிட்டது. எனக்குத் தெரியாமல் உள்ளடி வேலை செய்துள்ளார். என் படத்தைப் போட்டு, எனது ஆதரவாளர்களை அவர் பக்கம் இழுக்கிறார்.
தண்ணீருக்குப் பதிலாக வியர்வையை ஊற்றி, பாமக எனும் ஆலமரத்தை உருவாக்கினேன். அந்த ஆலமரத்தில் இருந்து ஒரு கிளையை வெட்டி கோடரி செய்து, அந்தக் கோடரியால் மரத்தையே வெட்ட முயற்சிக்கிறார். பணத்தால் கட்சிப் பொறுப்பாளர்களை விலைக்கு வாங்கியுள்ளார். அன்புமணி மீது உரிய நடவடிக்கை எடுக்காததற்கு காரணம், அப்படிச் செய்தால், அவர் கட்சியின் பொறுப்பாளர் மற்றும் தொண்டர்களை அதல பாதாளத்தில் தள்ளிவிடுவார்.
நான் நான்கு சுவர்களுக்குள் பேசுவதை, பொது வெளியில் பேசுவதாகக் கூறி, கட்சியினரிடம் அன்புமணி அனுதாபம் தேடுகிறார். என் மனக் குமறல்களை வெளிப்படுத்துகிறேன். பொது வெளியில் என்னைப் பற்றி பேசாமல் இருப்பதுபோல அன்புமணி நாடகமாடுகிறார். ஆனால், பணம் கொடுத்து சமூக வலைதளம் மூலமாக வசைபாடுகிறார்.
வரும் 17-ம் தேதி கட்சியின் பொதுக்குழுவை கூட்டியுள்ளேன். வரும் 9-ம் தேதி போட்டி பொதுக்குழுவை நடத்துகிறார். பாமக இரண்டாக பிரிந்துவிட்டதைப் போல மக்களிடம் மாயையை ஏற்படுத்திவிட்டார். குடும்பத்துக்கு உள்ளேயும் பணத்தை வைத்து விளையாட முடியும் என்று கருதுகிறார். என்ன அறிவுரை கூறினாலும் அன்புமணி அதை ஏற்றுக் கொள்ளமாட்டார்.
தைலாபுரம் தான் பாமக தலைமை அலுவலகம். இது தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளோம். சட்ட நடவடிக்கையில் எங்களுக்கு வெற்றி கிடைக்கும். அன்புமணியின் பொய் வார்த்தைகளை நம்பி அவருடன் சென்றவர்கள், என்னிடம் திரும்பி வர வேண்டும். அவ்வாறு வரும் போது பாசத்துடன் அரவணைத்துக் கொள்வேன்” என்று ராமதாஸ் கூறினார்.