திரைத்துறைக்கு வந்த புதிதில் தென்னிந்திய நடன இயக்குநர் ஒருவர் தன்னை அவமானப்படுத்தியதாக நடிகை இஷா கோபிகர் பகிர்ந்துள்ளார்.
இது குறித்து பேட்டி ஒன்றில் பேசிய இஷா கோபிகர், “தென்னிந்திய படங்களில் ஒன்றில், நான் என் சினிமா வாழ்க்கையை தொடங்கியிருந்தேன். இது நான் பாலிவுட்டில் நுழைவதற்கு முன்பு நடந்த சம்பவம். நான் படப்பிடிப்பில் இருந்தபோது, நிறைய நடனம் ஆட வேண்டி இருந்தது. தென்னிந்திய நடனங்கள் எப்படி இருக்கும் என்பது உங்களுக்குத் தெரியும். அவை எளிதானவை அல்ல. ஆனால் எனது முதல் படத்தில், என் நடன இயக்குனர் எல்லோர் முன்னிலையிலும் என்னிடம், ‘இந்தப் பெண்கள் பாலிவுட்டிலிருந்து வருகிறார்கள், ஏன் இவர்களை அழைத்து வருகிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. இவர்களுக்கு எதுவும் தெரிவதில்லை’ என்று கூறினார்.
அவர் என்னை அவமானப்படுத்தினார். அவர் ஏதாவது அழுத்தத்தில் இருந்தாரா என்று எனக்குத் தெரியவில்லை. உனக்கு நடனமாடத் தெரியவில்லை என்றால், ஏன் இங்கு வந்தாய் என்று கேட்டார். எனக்கு அது மிகவும் வருத்தமாகவும் அவமானமாகவும் இருந்தது. நான் என் மேக்கப் அறைக்குச் சென்று அழுதேன்.
ஆனால் நான் அதை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டேன். அடுத்த முறை நான் தென்னிந்திய சினிமாவுக்கு வரும்போது, நடனமாடக் கற்றுக்கொண்ட பிறகுதான் வருவேன், இனி யாரையும் அப்படிப் பேச விடமாட்டேன் என்று எனக்கு நானே கூறிக் கொண்டேன்” என்று இஷா கோபிகர் தெரிவித்தார்.