சென்னை: போலீஸ் எனக் கூறிக் கொண்டு வலம் வந்த நகைக்கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். கொலை, கொள்ளை, வழிப்பறி, திருட்டு உட்பட அனைத்து வகையான குற்றச் செயல்களையும் முற்றிலும் தடுக்க அனைத்து காவல் நிலைய போலீஸாரும் ரோந்துப் பணியை முடுக்கிவிட்டுள்ளனர். அதன்படி, வண்ணாரப்பேட்டை போலீஸார் அதே பகுதி கண்ணன் ரவுண்டானாவில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை மறித்து, அதிலிருந்த 2 இளைஞர்களிடம் விசாரித்தனர். தொடர்ந்து அவர்கள் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்திலும் சோதனை மேற்கொண்டனர். அப்போது, வாகனத்துக்குள் ‘போலீஸ் அசிஸ்டன்ட்’ என குறிப்பிட்டு அடையாள அட்டை ஒன்று இருந்தது. அதை பறிமுதல் செய்து விசாரித்தபோது அது போலியான அடையாள அட்டை என தெரியவந்தது.
இதையடுத்து, அந்த 2 இளைஞர்களிடமும் போலீஸார் தொடர்ந்து விசாரித்தபோது, “நாங்கள் நகைக்கடை ஒன்றில் வேலை செய்து வருகிறோம். எங்களது முதலாளியின் அடையாள அட்டைதான் அது” என பிடிபட்ட இளைஞர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, அடையாள அட்டையின் உரிமையாளர் யார் என விசாரித்தபோது அவர் பழைய வண்ணாரப்பேட்டை, முத்தையா முதலி தெருவைச் சேர்ந்த வினோத் சோப்டா (48) என்பது தெரிந்தது.
போலி அடையாள அட்டையை தயார் செய்து, பயன்படுத்தியதாக அவரை வண்ணாரப்பேட்டை போலீஸார் கைது செய்தனர். மேலும் விசாரணையில் கைது செய்யப்பட்ட வினோத் சோப்டா, சொந்தமாக நகைக்கடை நடத்தி வருவதும், அவர் பல்வேறு இடங்களில் தான் போலீஸ் என்று கூறிக்கொண்டு கெத்தாக சுற்றி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, விசாரணைக்குப் பின் அவர் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.