மும்பை: 18-வது சர்வதேச வானியல் மற்றும் வானியற்பியல் ஒலிம்பியாட் (IOAA 2025) மும்பையில் வரும் 11-ம் தேதி தொடங்கி 21-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் இந்தியா உட்பட 64 நாடுகளை சேர்ந்த சுமார் 300 மாணவர்கள் பங்கேற்கின்றனர்.
சர்வதேச நாடுகளை சேர்ந்த உயர் கல்வி பயிலும் பள்ளி மாணவர்கள் ஆண்டுதோறும் இந்த வானியல் மற்றும் வானியற்பியல் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்று வருகின்றனர். கடந்த 2007-ல் தாய்லாந்து நாட்டில் முதல் சர்வதேச வானியல் மற்றும் வானியற்பியல் ஒலிம்பியாட் நடைபெற்றது. அப்போது முதல் தொடர்ச்சியாக ஆண்டுதோறும் இந்த ஒலிம்பியாட் நடைபெற்று வருகிறது. கடந்த 2016-ல் இந்தியாவில் இந்த ஒலிம்பியாட் நடைபெற்றது.
இந்நிலையில், நடப்பு ஆண்டுக்கான ஒலிம்பியாட் மும்பையில் நடைபெறுகிறது. இதை பிரதமரின் அலுவலகம் மற்றும் அணுசக்தித் துறையின் துணையுடன் டாடா ஆராய்ச்சி நிறுவனத்தின் (TIFR) கீழ் இயங்கும் ஹோமி பாபா அறிவியல் கல்வி மையம் (HBCSE) நடத்துகிறது.
நடப்பு ஆண்டுக்கான இந்த ஒலிம்பியாட் நிகழ்வின் தொடக்க விழாவில் (ஆக.11) சிறப்பு விருந்தினராக இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் அஜய் சூட் மற்றும் கவுரவ விருந்தினராக சர்வதேச வானியல் கூட்டமைப்பின் முன்னாள் துணைத் தலைவர் அஜித் கெம்பவ் பங்கேற்கின்றனர். நிறைவு விழாவில் இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் மற்றும் ஹோமி பாபா தேசிய நிறுவனத்தின் வேந்தர் அனில் ககோட்கர் பங்கேற்கின்றனர்.
தியரி, புரிதல், தரவு பகுப்பாய்வு மட்டுமல்லாது குழு போட்டியும் மாணவர்களுக்கு இந்த முறை இந்த ஒலிம்பியாட் போட்டியில் நடைபெற உள்ளது. இந்தியாவில் இருந்து இந்த ஆண்டு மொத்தம் 5 மாணவர்கள் இதில் பங்கேற்கின்றனர். இவர்கள் கடந்த ஜூன் மாதம் தேர்வு செய்யப்பட்டனர். இந்த நிகழ்வு சர்வதேச அளவில் இளம் வானியல் ஆர்வலர்களிடையே நட்புறவை வளர்ப்பதிலும், கலாச்சார ரீதியான பரிமாற்றத்தை ஏற்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.